இளையராஜா செயலால் அதிர்ச்சியில் திரையுலகினர்... பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் திடீர் திருப்பம்..!

By Kanimozhi PannerselvamFirst Published Dec 23, 2020, 11:56 AM IST
Highlights

இந்த நிபந்தனை ஏற்றுக்கொண்டு உத்தரவாத மனு அளித்தால் இளையராஜாவை அனுமதிப்போம் என கூறியிருந்தனர். 

சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் பிரசாத் ஸ்டூடியோவில் இருந்த ரெக்கார்டிங் தியேட்டர் ஒன்றை இசைஞானி இளையராஜா பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தார். கடந்த 40 ஆண்டுகளாக அவர் பிரசாத் ஸ்டுடியோ அரங்கை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் இளையராஜாவை அந்த அரங்கை காலி செய்யுமாறு பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.


இதுகுறித்து இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தன்னுடைய பொருட்களை எடுக்க அனுமதி கோரி தொடர்ந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிமன்றம், அவரது இசை கருவிகள் மற்றும், ஸ்டூடியோவில் உள்ள பொருட்களை எடுக்க அனுமதிக்காதது ஏன் என்றும், இளையராஜாவை சிலமணி நேரம் தியானம் செய்ய கூட அனுமதிக்காதது ஏன்? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது.

அப்பொழுது பிரசாத் ஸ்டூடியோ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் கூறியதாவது, இளையராஜா பயன்படுத்தி வந்த அரங்கில் தற்போது மென்பொருள் நிறுவனம் இயங்கி வருகிறது. அவரின் பொருட்கள் எல்லாம் வேறு ஒரு அறையில் பத்திரமாக இருக்கிறது. அதை அவர் விரும்பிய நேரத்தில் வந்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தியானம் செய்வது குறித்து உரிமையாளர்களிடம் கேட்க வேண்டும் என்றார்.

இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது, இளையராஜாவை ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்க முடியாது என்றும், அவர் சார்பில் யாராவது வந்து பொருட்களை எடுத்துச் செல்லட்டும் என்றும் பிரசாத் ஸ்டுடியோ சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கறிஞர் ஒருவரை ஆணையராக நியமிப்பதாகவும், அவருடன் இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்கள் செல்லலாம் என்றும் நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்தார். இது தொடர்பாக இரு தரப்பும் பேசி செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி நேற்றைய விசாரணையின் போது, இளையராஜாவை தியானம் செய்ய அனுமதிக்க முடியுமா? முடியாதா? என 30 நிமிடங்களில் ஆலோசித்து பதிலளிக்கும் படி பிரசாத் ஸ்டூடியோ தரப்பிற்கு நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து தீவிர ஆலோசனைக்கு பிறகு நீதிபதி முன்பு ஆஜராஜ பிரசாத் ஸ்டுடியோ தரப்பு வழக்கறிஞர், பிரசாத் ஸ்டூடியோவுக்கு சொந்தமான நிலத்தை உரிமை கோர கூடாது, ஒரு உதவியாளர், ஒரு இசைக்கலைஞர் மற்றும் வழக்கறிஞர் மட்டுமே உடன் வர வேண்டும் என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகள் பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிபந்தனை ஏற்றுக்கொண்டு உத்தரவாத மனு அளித்தால் இளையராஜாவை அனுமதிப்போம் என கூறியிருந்தனர். இந்நிலையில் பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் இறங்கி வந்த இளையராஜா வழக்கை வாபஸ் பெறுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஸ்டூடியோவில் உள்ள தமது பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்  கோரிக்கை விடுத்துள்ளார். திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த இந்த பிரச்சனையில் இளையராஜா சமாதானமானது திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

click me!