எப்படியிருக்கிறார் கமல் ஹாசன்?... மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை...!

By Kanimozhi PannerselvamFirst Published Jan 19, 2021, 10:59 AM IST
Highlights

இந்நிலையில் இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் கமல் ஹாசனுக்கு அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல் ஹாசன் சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்தார். அதன் பின்னர் அவர் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியும் கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவடைந்தது. இதையடுத்து இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்குவார் என்று தொண்டர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 

அதில், சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தால் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்காக மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சிறிது காலம் ஓய்வில் இருக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் மக்களை நேரில் சந்திக்க இயலாது எனும் மனக்குறையைத் தொழில் நுட்பத்தின் வாயிலாகப் போக்கிக்கொள்ளலாம். இந்த மருத்துவ விடுப்பில் உங்களோடு இணையம் வழியாகவும் வீடியோக்கள் வழியாகவும் பேசுவேன். மாற்றத்துக்கான நம் உரையாடல் இடையூறின்றி நிகழும். எண் மண்ணுக்கும் மொழிக்கும் மக்களுக்கும் சிறு துன்பம் என்றாலும் என் குரல் எங்கும் எப்போதும் எதிரொலித்தபடிதான் இருக்கும். இப்போதும் இது தொடரும் என்றும் நம்பிக்கை கொடுத்திருந்தார். 

இந்நிலையில் இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் கமல் ஹாசனுக்கு அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கமல் ஹாசன் அவர்கள் ராமச்சந்திரா மெடிக்கல் சென்டரில் வலது காலில் எலும்பில் ஏற்பட்ட தொற்றிற்கான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அந்த தொற்றை நீக்குவதற்கான அறுவை சிகிச்சையானது மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் நலமாக இருக்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: #BREAKING அப்பாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது... கமலின் உடல் நிலை குறித்து மகள்கள் வெளியிட்ட அறிக்கை...!

இதற்கு முன்னதாக மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் வெளியிட்ட அறிக்கையிலும், இன்று காலையில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில், மருத்துவர் திரு. ஜே எஸ்.என். மூர்த்தி அவர்களது ஒருங்கிணைப்பில், எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் திரு மோகன்குமார் தலைமையில் எங்கள் அப்பாவிற்கு காலில் சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது அப்பா நலமாக உற்சாகமாக இருக்கிறார். அப்பாவை மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் மருத்துவமனை நிர்வாகமும் நல்ல முறையில் பார்த்துக்கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்குப் பின் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களைச் சந்திப்பார். மகிழ்விப்பார் அனைவரது அன்பிற்கும் பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!