இப்படித்தான் பணம் சம்பாதிக்கணுமா விக்ரம்..? 'மகான்' படக்குழுவினரை டாராக கிழித்த 'தமிழருவி மணியன்'

Published : Feb 14, 2022, 01:05 PM IST
இப்படித்தான் பணம் சம்பாதிக்கணுமா விக்ரம்..? 'மகான்' படக்குழுவினரை டாராக கிழித்த 'தமிழருவி மணியன்'

சுருக்கம்

சமீபத்தில் வெளியான மகான் படம் குறித்து காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ள தமிழருவி மணியன், காந்தியைக் கொச்சைப்படுத்திப் பணம் சேர்க்க வேண்டுமா எனக் காட்டமாகச் சாடியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள படம் மகான். இத்திரைப்படம் கடந்த பிப். 10ஆம் தேதி நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பலரும் பாராட்டி வரும் நிலையில், மகான் படம் குறித்து காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விக்ரமும், அவரது மகனும் இணைந்து நடித்துள்ள ' மகான் ' படத்தை நான் பார்க்கவில்லை. இந்தப் படம் காந்தியத்தைக் கொச்சைப்படுத்தப்படுவதாக, அறிவார்ந்த பலர் என்னிடம் சொல்லி மனம் வருந்தினர். 

இந்தப் படம் சார்ந்த இயக்குநரோ, தங்கள் பங்களிப்பைத் தந்த பிற கலைஞர்களோ காந்தியத்தின் அரிச்சுவடி கூட அறியாதவர்கள். இன்றைய இளைய சமூகத்திடம் காந்திய நற்பண்புகளை விதைப்பது இவர்கள் நோக்கமில்லை. நாய் விற்ற காசு கைக்கு வந்தால் போதும் என்பதற்கு மேல் இவர்களுக்கு எந்தச் சிந்தனையும் இருப்பதற்கு நியாயமில்லை. கருவாடு விற்றுப் பெற்ற பணம் நாறவா போகிறது என்று யோசிக்கப் பழகியவர்களிடம் ஒரு சமூகத்தையே புரட்டிப் போடும் புரட்சிகரமான கலைப் படைப்பையா நாம் எதிர்பார்க்க முடியும் ? வன்முறைக் கலாசாரம் அரிதினும் அரிதாய் வரும் சில நல்ல படங்களை மட்டுமே பார்க்கும் வழக்கமுடையவன் நான்.

சினிமாவைப் போன்று சக்தி மிக்க ஊடகம் உலகத்தில் வேறு எதுவுமில்லை. படிப்பறியாப் பாமரனையும் எளிதில் சென்றடையும் ஆற்றல் சினிமாவுக்கு மட்டுமே உண்டு. கடைசி கிராமத்து மனிதனையும் பெரிதாகப் பாதிக்கும் ஆற்றல் மிக்க இந்த சினிமா உலகம் சமூகப் பொறுப்பற்று இன்று இயங்குவதுதான் மிகவும் கவலைக்குரியது.  மனிதர்களின் சிந்தனைகளைச் செழுமைப்படுத்துவதோ சமூகநலனை மேன்மைப்படுத்துவதோ இன்றைய திரையுலகப் பிரும்மாக்களின் நோக்கமில்லை.

நாங்கள் கலைச்சேவை செய்ய வரவில்லை என்று கூச்சமற்றுப் பிரகடனம் செய்யும் 'மகான்கள்' இவர்கள். எப்படியாவது மக்களை மலினமான மயக்கங்களில் ஆழ்த்தி, அவர்களுடைய அடிமனத்தில் உறங்கிக் கிடக்கும் மன்மத உணர்வுகளை உசுப்பிவிட்டு, வன்முறைக் கலாசாரத்தை வளர்த்தெடுத்துக் காசு பறிப்பதையே தங்கள் வாழ்வியலாகக் கொண்ட இந்த நவீன நடிப்புச் சுதேசிகளிடம் உயர்ந்த கலைப் படைப்புகளை எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்? காந்தியம் காந்தியம் என்பது பின்பற்ற முடியாத ஒரு வறட்டுத் தத்துவம் இல்லை. 

அது ஓர் அற்புதமான நடைமுறை வாழ்வியல் என்பதைக் கார்த்திக் சுப்புராஜோ, நடிகர் விக்ரமோ அறிந்திருக்க வாய்ப்பில்லை. உயர் ஒழுக்கங்களையும், நற்பண்புகளையும், புலனடக்கத்தையும், சக மனிதர்களின் நலன் குறித்த சிந்தனைகளையும், சமத்துவத்தையும் பெரிதாகப் போற்றி வாழ்பவர்களே காந்தியைப் பின்பற்ற முடியும். சினிமாக் கலைஞர்கள் செல்வத்தைக் குவிக்கவும், மனம் போன போக்கில் இன்புற்று வாழவும், பொய்யான விளம்பர வெளிச்சத்தில் பூரித்துப் போகவும் கலைச்சேவை செய்ய வந்தவர்கள். இதில் விதிவிலக்காகச் சிலர் இருக்கக்கூடும். விதிவிலக்குகள் பொது விதியாவதில்லை. 

காந்தி அரசியல்வாதிகளுக்கு இடையே ஒரு துறவியாகவும், துறவிகளுக்கு இடையே ஓர் அரசியல்வாதியாகவும் வாழ்ந்தவர். இந்தப் புரிதலோடு காந்தியை அறிந்து கொள்ள கொஞ்சம் அறிவு வேண்டும். காந்தியம் ஒவ்வொரு தனி மனிதனுக்குரிய வாழ்க்கை விதிகளையும் வரையறை செய்து வைத்திருக்கிறது. சத்தியம், அகிம்சை, பிரம்மச்சரியம், திருடாமை, உடைமையின்மை, உடல் உழைப்பு. நாவடக்கம், அஞ்சாமை, சமய ஒற்றுமை, சுதேசி, தீண்டாமை ஒழிப்பு ஆகிய 11 மகாவிரதங்களை வலியுறுத்துவதுதான் காந்தியம்.

இவற்றுள் எந்த ஒன்றையும் ஏற்று நடக்க இன்றைய இளைய தலைமுறையில் பெரும்பாலானவர்கள் மனத்தளவில் கூடத் தயாராக இல்லை.  இவர்களின் இச்சைகளுக்குத் தீனி போட்டுக் காசு சேர்ப்பதே இப்போதைய கலையுலகப் பிரும்மாக்களின் ஒற்றை நோக்கமாகிவிட்டது. காந்தி வலியுறுத்திய கொள்கைகளில் மதுவிலக்கு என்பது மிகவும் முக்கியமானது. மதுவிலக்கு என்பது காந்தியத்தின் உயிர்த்தலம். ஏழ்மையின் கொடிய பிடியிலிருந்து வறியவர்களை மீட்டெடுப்பதற்காக வாழ்நாள் முழுவதும் மதுவுக்கு எதிராகப் போராடியவர் மகாத்மா.

1930-இல் நடந்த சட்டமறுப்புப் போரை முடிவிற்குக் கொண்டுவரக் காந்தி-இர்வின் ஒப்பந்தம் உருவானபோது, கள்ளுக்கடை மறியலை மட்டும் கைவிட மறுத்தவர் காந்தி என்பதையும், அதை வேறுவழியின்றி வைஸ்ராய் இர்வின் ஏற்றுக் கொண்டதையும் மகான்கள் சுப்புராஜும், விக்ரமும் அறிவார்களா? சிறிதளவாவது சமூகப் பொறுப்புணர்வு இருந்திருந்தால் சுப்புராஜ் மகான் படத்தை இயக்கியிருப்பாரா? பிதாமகன், சேது, காசி போன்ற படங்களில் தன் அளப்பரிய நடிப்பாற்றலை வெளிப்படுத்திய விக்ரம் இந்தப் படத்தில் நடிக்க இசைந்திருக்கலாமா? பணம்தான் இவர்களது ஒற்றை நோக்கமா? நான் பள்ளியில் பயின்ற போது பாகப்பிரிவினை பார்த்தேன்.

அது எனக்குக் கூட்டுக் குடும்பத்தின் சிறப்பைச் சொல்லிக் கொடுத்தது. பாசமலர் பார்த்தேன். அது சகோதர பாசத்தின் மேன்மையை உணர்த்தியது. பாலும் பழமும் பார்த்தேன். அது கணவன் - மனைவியின் ஆன்மநேயக் கலப்பை அறிமுகப்படுத்தியது. பாவமன்னிப்பு எனக்குச் சமய நல்லிணக்கத்தைப் பாடமாகப் போதித்தது. அக்காலம் தமிழ்த் திரையுலகின் பொற்காலம். ஆனால் இன்று? பேட்டை ரௌடியாகவும், பாலியல் பிறழ்ந்த காமுகனாகவும், எல்லாவித இன்பங்களையும் மனச்சான்றின் உறுத்தலே இல்லாமல் அனுபவிக்கத் துடிக்கும் விடலையாகவும் நம் இளைஞர்களை மாற்றும் சீரழிந்த படங்களே பெரும்பாலும் சமூகத்தை முற்றுகையிடுகின்றன. பணம் சம்பாதிக்க நல்ல வழியில்லையா? ‘ என்று கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?