அஞ்சலிக்காக வைக்கப்பட்ட புனித் உடல்… பெங்களூருக்கு படையெடுக்கும் ரசிகர்கள்!!

By Narendran SFirst Published Oct 30, 2021, 11:07 AM IST
Highlights

பெங்களூரு கண்டிர்வா மைதனாத்தில் வைக்கப்பட்டுள்ள புனித் உடலுக்கு ஏராளமான ரசிகர்கள் இரவு முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் வழக்கம் போல் நேற்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருக்கையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதை அடுத்து அவர், பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில், ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மதியம் காலமானார். புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினர், திரைத்துறையினர் மற்றும் சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அடுத்து மருத்துவமனை முன்பு ரசிகர்கள் பலர் குவிந்ததால் அந்த இடமே ஸ்தம்பித்துபோனது. பின்னர் காவல்துறையினர் ரசிகர்களை தடுத்து நிறுத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இதற்கிடையே பேங்களூரில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளை உடனே மூட உத்தரவிடப்பட்டது. பெங்களூரே பரபரப்பாக மாறியது.

இந்த நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மருத்துவமனைக்கு நேரில் சென்று புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அதை தொடர்ந்து அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. புனித் ராஜ்குமாரின் உடல் இரவு 7 மணி வரை சதாசிவநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் அவரது உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கண்டீவரா மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. புனித் குமாரின் உடலை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். மைதானம் முன்பு காத்திருந்த ரசிகர்கள் வரிசையில் சென்று அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.  

பெங்களூரு கண்டிர்வா மைதனாத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு விடிய விடிய ரசிகர்கள் நேரில் அஞ்சலி வருகின்றனர். நேற்று இரவு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தததால், காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர். மைதானத்தின் வெளியே 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள். அங்குள்ள ரசிகர்கள் புனீத்தின் மரணத்தை நம்பமுடியாமல் கண்ணீர் வடித்தனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து ரசிகர்கள் படையெடுத்து வருவதால் பெங்களூர் முழுவதும் 5000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள், நடிகர்கள் யாஷ், தர்ஷன், நடிகைகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள். அதை தொடர்ந்து தென்னிந்தியாவில் இருந்து பிரபலங்கள் புனீத் ராஜ்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புனீத்தின் மகள் அமெரிக்காவில் இருந்து வருகிறார். அவர் வந்த பிறகு அரசு மரியாதையுடன் அவரின் உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்படும். புனீத்தின் தந்தை ராஜ்குமாரின் உடல் அருகிலேயே, இவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!