சென்னை காவல்துறை அதிரடி… கமலின் விக்ரம் படத்துக்கு வந்த சோதனை..

By manimegalai aFirst Published Oct 29, 2021, 8:57 PM IST
Highlights

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் படப்பிடிப்புக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் படப்பிடிப்புக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை எடுத்து வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தொடக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்று தகவல் வெளியாகி பின்னர் அது மறுக்கப்பட்டது.

படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்து வருகிறது. படத்தின் இசைமைப்பு வேலைகளை அனிருத் சிறப்பாக பார்த்து வருகிறார். விக்ரம் படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இந் நிலையில் சென்னையில் படப்பிடிப்பு நடத்த விக்ரம் படக்குழு அனுமதி கோரியது. ஆனால் அதற்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதற்கான காரணத்தையும் விரிவான பதில் கடிதத்தில் கூறி உள்ளது.

அதாவது விக்ரம் படக்குழுவினர் சென்னை எழும்பூரில் உள்ள காவல்துறை அருங்காட்சியகத்தில் முக்கியமான சில காட்சிகளை படம்பிடிக்க அனுமதி தருமாறு கேட்டு இருந்தனர்.

படத்துக்காக அரங்குகள் அமைக்க வேண்டும், ஷூட்டிங் நடத்த வேண்டும் என்றும் கோரி இருந்தனர். ஆனால் இதற்கு சென்னை காவல்துறையினர் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து படப்பிடிப்பு குழுவுக்கு சென்னை மாநகர காவல்துறை சார்பில் ஒரு கடிதமும் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த கடிதத்தில் கொரோனா விதிமுறைகள் இன்னமும் நடைமுறையில் இருக்கின்றன, ஆகவே அரசுக்கு சொந்தமான இடங்களில் எவ்வித படப்பிடிப்பும் நடத்த அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது.

படப்பிடிப்புக்கான அனுமதி மறுக்கப்பட்டு உள்ள விவரம் அறிந்த தயாரிப்பு மற்றும் படக்குழு அதிர்ந்து போயிருக்கிறது. இப்போது மாற்றாக  வேறு எங்கு படப்பிடிப்பு நடத்தலாம் என்று ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

வெகு விரைவில் படப்பிடிப்புக்கான மாற்று இடம் கிடைத்துவிடும் என்றும் அதன்பின்னர் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கமலின் விக்ரம் படத்துக்கு அனுமதி கேட்டு அதற்கு சென்னை காவல்துறை மறுத்து கடிதம் எழுதியுள்ள விவரம் இணையத்தில் வெகு வைரலாக பரவி உள்ளது. கடிதம் பற்றி ரசிகர்களும் ஏக வருத்தத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு பற்றிய முழுமையான திட்டமிடல் மற்றும் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

click me!