கால்பந்து போட்டிக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்த பிரபல மலையாள நடிகர் மம்மூக்கோயாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேடை நாடக கலைஞராக இருந்து பின்னர் மலையாள திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் மம்மூக்கோயா. இவர் கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான, 'அண்ணியாருதே பூமி' என்கிற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்த இவர் பின்னர் மம்மூட்டி, மோகன்லால், போன்ற முன்னணி மலையாள நடிகர்களின்படங்களில் காமெடி வேடத்திலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
இதுவரை மலையாளத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மம்மூக்கோயாவுக்கு தற்போது 76 வயது ஆகிறது. கால்பந்தாட்டத்தின் மீதும் ஆர்வம் கொண்ட இவர், அண்மையில் கேரள மாநிலம் களிகவு மாவட்டத்தில் நடந்த கால்பந்தாட்ட போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார். போட்டியை ஆர்வத்துடன் கண்டுரசித்துக் கொண்டிருந்த நிலையில், மம்மூக்கோயாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதும் மூச்சு பேச்சின்றி கீழே சரிந்து விழுந்தார்.
இதையும் படியுங்கள்... முதல்வரின் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட சிவகார்த்திகேயன்.. ரஜினி உடனான மோதல் குறித்தும் பளீச் பதில்
இதைப்பார்த்து பதறிப்போன நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மம்மூக்கோயாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதுவும் பலனளிக்காததால் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் கோழிக்கோடில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மம்மூக்கோயாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை உறுதி செய்தனர்.
பின்னர் அவரை ஐசியூ வார்டில் அனுமதித்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி மம்மூக்கோயா பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவு மலையாள திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மம்மூக்கோயாவின் மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... RRR பட நாயகன் ஜூனியர் என்.டி.ஆருக்கு அடித்த ஜாக்பார்ட்! தேடி வந்து வாய்ப்புக்கொடுத்த தயாரான ஹாலிவுட் இயக்குனர்