Manikandan Lover Movie : தமிழ் சினிமா உலகில் புதிய நாயகனாக உருவெடுத்து நல்ல பல படங்களை கொடுத்து வருகின்றார் நடிகர் மணிகண்டன்.
தமிழ் சினிமா மீது கொண்ட ஆசையின் காரணமாக வசனகர்த்தாவாக திரையுலகிற்குள் நுழைந்து இன்று அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து ஹீரோ என்கின்ற அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார் மணிகண்டன் என்றால் மிகையல்ல. பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க துவங்கி கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான புஷ்கர் காயத்ரி அவர்களுடைய "விக்ரம் வேதா" என்கின்ற திரைப்படத்தில் வசனகர்த்தாவாக களம் இறங்கியவர் தான் மணிகண்டன்.
விக்ரம் வேதா திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரமும் அவர் ஏற்று நடித்திருப்பார். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "காலா" இவருக்கு ஒரு நல்ல வரவேற்பு கொடுத்த நிலையில் 2021 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வெளியான "ஜெய் பீம்" திரைப்படம் மணிகண்டனின் புகழை இந்தியா முழுவதும் பரவச் செய்தது.
அதன் பிறகு தற்போது பல திரைப்படங்களில் ஹீரோவாக அவர் நடித்து வருகிறார், இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான "குட் நைட்" என்கின்ற திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தற்பொழுது புது முக இயக்குனர் பிரபு ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள "லவ்வர்" திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் மணிகண்டன்.
இப்பொது அந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் அவர்கள் பேசிய அதே சர்ச்சை வசனத்தை இப்பொது லவர் திரைப்படத்தில் மணிகண்டன் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.