
சின்னத்திரையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சீரியல்களை ஒளிபரப்பி, மக்கள் மனங்களில் இடம் பிடித்திருக்கிறது சன் தொலைக்காட்சி. தற்போது விஜய் டிவி, ஜீ தமிழ் என பல்வேறு தொலைக்காட்சிகள் சீரியல்களை ஒளிபரப்பி வரும் நிலையிலும், சன் தொலைக்காட்சிக்கு சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியலின் முதல் பாகம் பாதியிலேயே முடிந்த நிலையில், தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. பெண்களின் சுயமரியாதை மற்றும் அதிகாரப்படுத்துதலை மையமாகக் கொண்டு இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது.
ஆணாதிக்கம் மிக்க ஒரு பெரிய குடும்பத்தில், குணசேகரன் என்கிற அடக்குமுறை மனோபாவம் கொண்ட மூத்த அண்ணனின் கீழ் இயங்கும் குடும்பத்தின் கதையை பற்றியது. குணசேகரனுக்கு மொத்தம் மூன்று தம்பிகள். இவர்கள் வீட்டிற்கு மருமகள்களாக வரும் பெண்களை அடிமைகளாக வைத்திருக்க விரும்புகின்றனர். இதில் கடைசி மருமகளாக வரும் ஜனனி தைரியமான, துணிச்சலான படித்த பெண்ணாவாள். அவர் மற்ற மருமகளான ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி ஆகியோரை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க முயற்சி செய்கிறார். தனது கல்வி அறிவு மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் வீட்டில் இருக்கும் பிற்போக்குத் தனங்களை உடைத்து மற்ற பெண்களுக்கும் விடுதலை கிடைக்க போராடுகிறார்.
குடும்பத்தில் நடக்கும் போராட்டங்கள், சவால்கள், குணசேகரனின் சூழ்ச்சிகள் ஆகியவற்றை முறியடித்து மருமகள்கள் எவ்வாறு முன்னேறுகிறார்கள் என்பது குறித்த கதை தான் ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார். அவருக்காகவே பலரும் இந்த சீரியலை பார்க்கத் தொடங்கினர். ஆனால் திடீரென ஒரு நாள் அவர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்குப் பின்னர் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிகர் வேலராமமூர்த்தி நடித்து வருகிறார். இந்த நாடகத்தை திருச்செல்வம் இயக்க, நடிகை ஸ்ரீவித்யா வசனம் எழுதி வருகிறார். சன் எண்டர்டெயின்மென்ட் மற்றும் திருச்செல்வம் தியேட்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நாடகத்தை தயாரித்துள்ளனர்.
மாரிமுத்துவின் மறைவுக்குப் பின்னர் ‘எதிர்நீச்சல்’ சீரியல் பின்னடைவை சந்தித்தது. வேலராமமூர்த்தி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு பொருந்தி போகவில்லை என்று ரசிகர்கள் கவலை கொண்டனர். இதைத் தொடர்ந்து முதல் சீசன் ஜூன் 8, 2024 அன்று 744 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது. ஆனால் எதிர்நீச்சல் சீரியல் மீண்டும் ஒளிபரப்பாகும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ என்கிற பெயரில் பாகம் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் பாகம் 2 வரவேற்பு பெற்றாலும் சமீப காலமாக கதையில் முன்னேற்றம் இல்லை என்றும், தேவையற்ற காட்சிகளால் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும் சன்து தொலைக்காட்சியின் முக்கிய தொடர்களில் ஒன்றாகவும், டிஆர்பி ரேட்டிங்கில் அவ்வப்போது இடம் பிடிக்கும் தொடராகவும் இந்த தொடர் இருந்து வருகிறது.
முதல் சீசனில் நடித்த அனைவருமே இரண்டாவது சீசனிலும் தொடர்ந்து வருகின்றனர். வேலராமமூர்த்தி, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, விபு ராமன், கமலேஷ், சபரி, சத்தியபிரியா, பாம்பே ஞானம், ரித்திக் ராகவேந்திரா ஆகியோர் இரண்டாவது சீசனிலும் தொடர்ந்து நடித்து வருகின்றனர். தற்போது கதைப்படி தர்ஷனின் கல்யாண விவகாரம் நடந்து வருகிறது. திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லாத தர்ஷனை குணசேகரன் கட்டாய திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகளை நடத்தி வரும் நிலையில், தர்ஷன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். இதனால் அடுத்து என்ன நடக்க போகிறது என்கிற ஆர்வத்துடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் சீசனில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வந்த மதுமிதா சன் தொலைக்காட்சியில் இருந்து விலகி விஜய் தொலைக்காட்சியில் ‘அய்யனார் துணை’ சீரியலில் நடித்து வருகிறார். எனவே மதுமிதாவிற்கு பதிலாக நடிகை பார்வதி ஜனனி ரோலில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ஜனனியாக பார்வதியை ஏற்றுக் கொள்வார்களா என்கிற தயக்கம் இருந்தது. ஆனால் தற்போது பார்வதி தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மதுமிதாவிற்கு கிடைத்த அதே வரவேற்பு தற்போது பார்வதிக்கும் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் நடித்துவரும் நடிகர் நடிகைகளின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கனிகாவிற்கு ஒரு நாளைக்கு ரூ.15,000 சம்பளமும், ரேணுகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியதர்ஷினிக்கு ஒரு நாளைக்கு ரூ.13,000 சம்பளமும், நந்தினியாக நடித்து வரும் ஹரிப்பிரியாவிற்கு ஒரு நாளைக்கு ரூ.15,000 சம்பளமும், ஜனனியாக நடித்து வரும் பார்வதிக்கு ஒரு நாளைக்கு ரூ.12,000 சம்பளமும் வழங்கப்படுவதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. இதில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக கனிகா இருக்கிறார். ‘பைவ் ஸ்டார்’ என்கிற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமான கனிகா பல படங்களில் நடித்துள்ளார். பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசியும் இருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அஜித் நடித்த ‘வரலாறு’ படத்தில் அவருக்கு ஜோடியாக கனிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.