#BREAKING கதை திருட்டு வழக்கு... பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jan 30, 2021, 8:20 PM IST
Highlights

இந்த வழக்கில் கடந்த 11 ஆண்டுகளாக இயக்குநர் ஷங்கர் நேரில் ஆஜராகவில்லை என்ற புகாரின் அடிப்படையிலேயே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 

1996ம் ஆண்டு இனிய உதயம் என்ற தமிழ் பத்திரிக்கையில் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ஜுகிபா என்ற கதை வெளியானது. அதே கதை மீண்டும் ‘தித் திக் தீபிகா’ என்ற நாவலிலும் 2007 ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில்  2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் "எந்திரன்" திரைப்படம் வெளியான பின்பு தான் ‘ஜுகிபா’ கதை திருடப்பட்டு, எந்திரன் திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எந்திரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மற்றும் டைரக்டர் ஷங்கர் இருவருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். 

அவர்களிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில், எந்திரன் படத்தின் இயக்குனர் ஷங்கர் மீதும், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீதும் காப்புரிமை சட்டத்தின் கீழ் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படாததால், எழும்பூர் 13வது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


இந்த வழக்கில் ஆஜராகும் படி இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் இருவரும் தாங்கள் கதையை திருடவில்லை என்றும், இந்த கிரிமினல் வழக்கு செல்லாது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதையடுத்து எழும்பூர் நீதிமன்ற வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. எந்திரன் கதை திருட்டு தொடர்பான சிவில் வழக்கு கடந்த 10 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், 2019ம் ஆண்டு தீர்ப்பு வழக்கப்பட்டது. 

அதில், கலாநிதிமாறன் மீது எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடுத்த வழக்கு செல்லாது எனவும், இயக்குனர் ஷங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முகாந்திரம் உள்ளது என்றும் கூறிய நீதிமன்றம், கதை ஒரே மாதிரி இருப்பதாக கூறி கதைக்கும் சினிமாவுக்கும் உள்ள 16 ஒற்றுமைகளை பட்டியலிட்டுக் காட்டி அதன் மூலம் காப்புரிமை மீறல் அப்பட்டமாக தெரிகிறது. அதனால், எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஷங்கருக்கு எதிரான வழக்கை காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்தலாம் என்று  உத்தரவிட்டது.


இதையடுத்து எழும்பூர் நீதிமன்றம் விசாரணையை தொடர நினைத்த போது கொரோனா தொற்று காரணமாக நீதிமன்ற பணிகள் முடங்கின. இடையில் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இயக்குநர் ஷங்கரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது கொரோனா பிரச்சனைகள் முடிவுக்கு வந்த நிலையில், நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது புகார்தாரர் ஆருர் தமிழ்நாடன் நேரில் ஆஜர் ஆகி வழக்கு விசாரணைக்குத் தயாராக இருப்பதாக வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், இயக்குனர் சங்கர் எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் நேற்று ஆஜராகவில்லை.

இதையடுத்து எழும்பூர் பெருநகர 2வது மாஜிஸ்திரேட் இயக்குநர் ஷங்கருக்க்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார். மேலும் பிப்ரவரி 19ம் தேதி முதல் விசாரணையை தொடங்க உள்ளதாகவும் அறிவித்தார். இந்த வழக்கில் கடந்த 11 ஆண்டுகளாக இயக்குநர் ஷங்கர் நேரில் ஆஜராகவில்லை என்ற புகாரின் அடிப்படையிலேயே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

click me!