பழமே பாலைத் தேடி அலையும் அவலம்... ஆமாம்! கூட்டணிக்காக தூது விட்டுக்கொண்டிருக்கும் தேமுதிக!

By Selva KathirFirst Published Jan 18, 2019, 10:52 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச காங்கிரஸ் மேலிடத்திற்கு தே.மு.தி.க தூது அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமாக தேர்தல் என்றால் தே.மு.தி.கவை தேடி தான் தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை படையெடுப்பது வழக்கம். ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலோடு இந்த நிலைமை மலையேறிச் சென்றுவிட்டது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.கவை கூட்டணிக்கு இழுக்க தி.மு.க ஒரு பக்கம் முயன்றது. காங்கிரஸ் மறுபக்கம் பேசியது. ஆனால் இறுதியில் பா.ஜ.கவோடு விஜயகாந்த் கூட்டணி வைத்தார்.

இதே போல் கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும் கூட தே.மு.தி.கவை கூட்டணிக்கு அழைத்து வழி மேல் விழி வைத்து காத்திருந்தார் கலைஞர். ஆனால் ஸ்டாலின் தரப்பினரின் முட்டுக்கட்டையால் கூட்டணி கை கூடவில்லை. அதே சமயம் மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் வைகோ விஜயகாந்தை கொத்திக் கொண்டு போனார். ஆனால் தேர்தல் முடிவு வைகோவுக்கு மட்டும் அல்ல விஜயகாந்துக்கும் கடும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து தே.மு.தி.கவின் முன்னணி நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க., அ.தி.மு.கவில் தஞ்சம் அடைந்தனர். ஆனாலும் கூட விஜயகாந்திற்காக தற்போதும் கணிசமான அளவில் தொண்டர்கள் தமிழகத்தில் இருக்கின்றனர். அதே சமயம் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கட்சியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர கடுமையாக உழைத்து வருகிறார். ஆனால் விஜயகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவருடன் தற்போது அமெரிக்காவில் இருக்க வேண்டிய நிலை பிரேமலதாவுக்கு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணியை உறுதிப்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றன. தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது. அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி கூட விரைவில் அறிவிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. பா.ம.கவை கூட்டணிக்கு வருமாறு பா.ஜ.க அழைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தே.மு.தி.க தான் இன்னும் தனிமையில் தவித்து வருகிறது.

இதனால் காங்கிரஸ் கட்சியில் தனக்கு உள்ள நண்பர்கள் மூலமாக கூட்டணி கணக்கு ஒன்றை எல்.கே.சுதீஷ் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேரடியாக தி.மு.கவை அணுகினால் மரியாதை இருக்காது என்பதால் காங்கிரஸ் தலைவர்கள் மூலம் அணுக சுதீஷ் முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியே தங்களுக்கான தொகுதி எண்ணிக்கையில் இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

இந்த நிலையில் தே.மு.தி.கவிற்கு எப்படி தாங்கள் தி.மு.கவிடம் பேச முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நழுவுவதாக கூறப்படுகிறது. இருந்தாலும் கூட அனுப்ப வேண்டிய சேதியை அனுப்பிவிட்டு சுதீஷ் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள பிரேமலதாவும் ஒரு நாளைக்கு மூன்று முறை சுதீசிடம் பேசி அரசியல் நிலவரத்தை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

click me!