அண்ணாத்த இயக்குனரின் ஒரே மாதிரியான கதையம்சம் ...கதைய மாத்துங்க சார் ரசிகர்களின் வைரல் பதிவு

By manimegalai aFirst Published Nov 5, 2021, 4:27 PM IST
Highlights

இயக்குனர் சிவா தனது படங்களில் ஒரே மாதிரியான கதை கருவையும் காட்சியமைப்பையும் கையாண்டுள்ளதாக ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தெலுங்கில் வெளியான சவுர்யம், சங்கம் திரைப்படங்கள் மூலம் இயக்குனரான சிவா கார்த்திக்கை வைத்து சிறுத்தை படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். காமெடி கலந்த ஆக்சன் படமான சிறுத்தையை அடுத்து தல அஜித்தை வைத்து அடுத்தடுத்து நான்கு படங்களை இயக்கும் ஜாக்பாட் வாய்ப்பை பெற்றார் இயக்குனர் சிவா.

அஜித்துடன் இவர் இணைந்த முதல் திரைப்படம் வீரம், சகோதர பாசத்தை ஆக்சன் கலவையுடன் கொடுத்தது. இதையடுத்து வேதாளம் சகோதரி அன்பை பிரதிபலித்தது. பின்னர் தனது கதை களத்தில் சுவாரஸ்யம் சேர்க்கும் விதமாக  ஆக்சன் பக்கம் திருப்பிய சிவா விவேகம் படத்தை இயக்கினார். மீண்டும் தனக்கு உரித்தான சென்டிமெண்டை கையில் எடுத்த சிவா 2019 ஆம் ஆண்டு ஒரு தரமான படமாக தந்தை - மகளின் அன்பை அள்ளி  தெளித்த படம் தான் விசுவாசம். இந்த படத்தின் மாபெரும் வெற்றியால் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பட வாய்ப்பும் சிவாவின் வாயில் கதவை தட்டியது. ரஜினியே  நேரில் அழைத்து கொடுத்த வாய்ப்பை நல்வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள முடிவு செய்த இயக்குனர் சிவா செண்டிமெண்ட்  கதை  கருவின் துணையுடன் அண்ணாத்த படத்தை உருவாக்கியுள்ளார்.

 ரசிகர்கள் மத்தில் வரவேற்பை பெற்று வரும் இந்த படம் உலக முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. நல்ல பாக்ஸ் ஆபிஸ் ரேட்டிங்கை பெற்று வரும் அண்ணாத்த  திரைப்படம் நட்சத்திர பட்டாளங்களுடனும், ரஜினிக்காக மாஸ் டைலாக்குடனும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிவாவின் மற்ற படங்களுக்கும் தற்போதைய படைப்பான அண்ணாத்த படத்திற்கும் உள்ள  ஒற்றுமை குறித்த கமெண்ட்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அஜித்தின் வேதாளம் படத்தில் கல்கத்தாவில் அஜித்துக்கு தங்கை கிடைப்பார். அதேபோல அண்ணாத்த படத்தில் ஓடிப்போன தங்கை கல்கத்தாவில். இரண்டு படங்களிலும் தங்கையை கொலை செய்ய கார்ப்ரேட் வில்லன் என ஒற்றுமை பட்டியல் நீள்கிறது.

விஸ்வாசம் படத்தில் நாயகன் தன் குடும்பத்தை பார்க்க கிராமத்திலிருந்து நகரத்திற்கு வருவது போன்று அண்ணாத்தையில் தங்கையை காண நாயகன்  கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து மாஸ் காட்டுகிறார். இது போன்ற ஒற்றுமைகளை பெரும்பாலான இயக்குனர்களின் தொடர் கதையமைப்புகளில் பார்க்கலாம் என்றாலும் பெரும் ரசிகர் பட்டாளங்களை கொண்ட தமிழ் முன்னணி நடிகர்களின் படங்களை கையாளும் இயக்குனர் இவ்வாறான   காட்சியமைப்புகளை தவிர்ப்பது  சிறப்பாக இருக்குமென ரசிகர்கள் கருதுகின்றனர்.

click me!