பத்திரிகையாளர்களை அவமதித்துவிட்டு மன்னிப்பு கேட்கும் ‘96 பட இயக்குநர்...

By Muthurama LingamFirst Published Feb 5, 2019, 3:54 PM IST
Highlights


நேற்று ‘96 பட 100 வது நிகழ்ச்சியில் பல பத்திரிகையாளர்கள் மனம் புண்பட்டதை அறிந்து வருந்தி மன்னிப்புக்கோருகிறேன்’ என்று ஒரு அவசர அறிக்கை அனுப்பியிருக்கிறார் அப்பட இயக்குநர் பிரேம்.

நேற்று ‘96 பட 100 வது நிகழ்ச்சியில் பல பத்திரிகையாளர்கள் மனம் புண்பட்டதை அறிந்து வருந்தி மன்னிப்புக்கோருகிறேன்’ என்று ஒரு அவசர அறிக்கை அனுப்பியிருக்கிறார் அப்பட இயக்குநர் பிரேம்.

மாலை 5.30க்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்ட விழா எட்டுமணிக்கு மேல் துவங்கியதுமே ஏகப்பட்ட எரிச்சலில் இருந்த பத்திரிகையாளர்கள், நிகழ்வில் ஒரு சில யூடுப் விமர்சகர்களின் விமர்சனங்கள் மட்டுமே நன்றியுடன் நினைத்துப் பார்க்கப்பட்டதால் மேலும் டென்சனாகினர். இது நிகழ்ச்சியின் முடிவில் தெளிவாக வெளிப்பட்டது.

அதைப் புரிந்துகொண்டு அவசர மன்னிப்புக் கடிதம் வெளியிட்ட பிரேம் அதில் ...'96' படத்தை இந்த இமாலய வெற்றிக்கு வழி வகுத்த தூக்கி கொண்டாடிய அனைத்து பத்திரிகை, ஊடக, இணையதள, தொலைக்காட்சி, பண்பலை நண்பர்கள் அனைவருக்கும் முதலில் என் தார்மீக வருத்தத்தை தெரிவித்து கொண்டு நடந்த நிகழ்வை தெளிவு படுத்த கடமை பட்டிருக்கிறேன்.

'96' பட நூறாவது நாள் விழாவில் இந்த படத்தை கொண்டாடிய பத்திரிகையாளர்களையும், அவர்கள் '96' படத்துக்கு தந்த கவுரவங்களையும் திரையிட்டு மகிழ்ச்சி படுத்த வேண்டும் என்று விரும்பிதான் அந்த வீடியோ திரையிடப்பட்டது. மேலும், ஒவ்வொரு பிரிவாக அந்த வீடியோ நிகழ்வை வைத்து கொள்ளலாம். விருந்தினர்கள் ஒவ்வொருவரும் பேசி அமரும் போது இடையிடையே அந்த வீடியோவை சின்ன சின்னதாக காண்பித்தால் சரியாக இருக்கும் என்று திட்டமிட்டோம்.

இந்த வீடியோ ஒன்று இருக்கிறது என்பதே பட நாயகன் விஜய்சேதுபதிக்கோ, நாயகி த்ரிஷாவுக்கோ தெரியாது. அவர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் ஒரு திடீர் சந்தோஷத்தை தரலாம் என்று நினைத்துதான் அந்த வீடியோ தயாரிக்கப்பட்டது. விழா தொடங்கி 140 பேர்களுக்கு மேல் நினைவு பரிசு வழங்கயிருந்தோம். ஆனால், நேரமின்மையால் 40 பேருக்கு மேல் தர முடியாமல் போய்விட்டது. அதைப்போலதான் பெரும்பாலான பத்திரிகையாளர்களின் விமர்சன பாராட்டுக்களை தொகுத்து அடுத்து போட இருந்த வீடியோவுக்கும் திரையிட முடியாமல் நேரமின்மை தடுத்து விட்டது.

இந்த நிகழ்வால் பத்திரிகையாளர்களாகிய உங்கள் மனம் வருத்தத்திற்கு என் சிரம்தாழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன் பத்திரிகையாளர்கள்தான் இந்த உயர்வுக்கு காரணம். என்னை உயர்த்தி விட்ட உங்களை நான் ஏன் அவமரியாதை செய்யப்போகிறேன். எனவே, நடந்த தவறுக்கு யார் மீதும் எதன் மீதும் பழி போட்டு விட்டு போகாமல் நானே பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்கிறேன். இனி எதிர்காலத்தில் இதுபோன்ற எந்த தவறும் நடக்காது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

எப்போதும் என் உயர்வில் பத்திரிகையாளர்களாகிய உங்கள் அனைவரின் ஆதரவும், அன்பும் எனக்கு தொடரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன். இவ்வாறு பிரேம்குமார் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

click me!