’ஒத்தச்செருப்பு’போன்ற படத்தை என்னைப் போன்ற வடிகட்டிய முட்டாள்கள் மட்டுமே எடுப்பார்கள்’...சாட்சாத் பார்த்திபன்...

By Muthurama LingamFirst Published Aug 23, 2019, 3:22 PM IST
Highlights

ஒற்றை மனிதனாக பார்த்திபன் நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் ஒற்றை செருப்பு படத்திற்கான அங்கீகாரம் மற்றும் சான்றளிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.பாரதிராஜா, பாக்கியராஜ் போன்ற சாதனையாளர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், இந்திய சாதனை மற்றும் ஆசிய சாதனைகளை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும் விவேக் பங்கு பெற்று, பார்த்திபனுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
 

ஒற்றை மனிதனாக பார்த்திபன் நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் ஒற்றை செருப்பு படத்திற்கான அங்கீகாரம் மற்றும் சான்றளிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.பாரதிராஜா, பாக்கியராஜ் போன்ற சாதனையாளர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், இந்திய சாதனை மற்றும் ஆசிய சாதனைகளை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும் விவேக் பங்கு பெற்று, பார்த்திபனுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

பார்த்திபனை வாழ்த்திப் பேசிய பாக்கியராஜ்…எனது உதவியாளர்கள் பார்திபனும் பாண்டியராஜனும் வெளிநாடுகளுக்கு தங்கள் படங்களை அனுப்பி விருதுகளை வாங்கி விட்டார்கள்.ஆனால் நான்தான் இன்னும் ஒரு விருதும் வாங்கவில்லை. இதை நினைத்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது. படத்துக்கு படம் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் பார்த்திபனின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டுவதா அல்லது துணிச்சலை நினைத்து பயப்படுவதா என்று எனக்குத் தெரியவில்லை. எல்லாவிதமான உணர்ச்சிகளையும் காட்டி மிக அற்புதமாக நடித்திருக்கிறார் பார்த்திபன். தமிழ்ப் படவுலகுக்கு மட்டுமின்றி இந்தியத் திரையுலகுக்கே பெருமை சேர்க்கும் படம் இது என்றார்.

அடுத்து பேசிய இயக்குநர் பாரதிராஜா,’படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்ததும் என்னைப் பேச அழைக்காதீர்கள் படத்தைப்பற்றி நான் நீண்ட கடிதம் ஒன்றை உங்களுக்கு பிறகு எழுதுகிறேன் என்றேன். காரணம் இன்னமும் என்னால் படத்திலிருந்து வெளியே வரமுடியவில்லை. தனி ஒரு ஆள் மட்டும் கால் மணி நேரமோ அரை மணி நேரமோ திரையில் தோன்றி நடிக்கலாம்.ஆனால் சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் முழு படத்திலும் தோன்றுவதெல்லாம் விளையாட்டு விஷயமில்லை. அதையும் மிக அற்புதமாக செய்திருக்கிறார் பார்த்திபன். யார் வேண்டுமானாலும் சினிமாவில் நடிக்கலாம், யாரை வேண்டுமானாலும் சினிமாவில் நடிக்க வைக்கலாம் என்று சொல்லும் நானே, புதிய பாதையில் பார்த்திபன் நாயகனாக நடிக்கிறார் என்பது தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தேன்.

புதிய பாதையில் தன்னை நிரூபித்த பார்த்திபன் இன்று நடிப்பில் புதிய பரிமாணங்களைத் தொட்டிருக்கிறார். உனக்கு உரிய உயரத்தை நீ இன்னும் அடையவில்லை என்று நான் பார்த்திபனிடம் அடிக்கடி சொல்வேன். ஒற்றை செருப்பு படம் மூலம் உலகத்தையே தமிழ்ப்படங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் பார்த்திபன் என்றார்.

பாரதிராஜாவைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் பார்த்திபன்…புதிய பாதை படத்தைப் பார்த்த சில விநியோகஸ்தர்கள் வர்த்தக ரீதியில் படம் வெற்றி பெறாது என்று சொன்னார்கள். நல்ல படங்களைக் கொடுப்பதில் உள்ள சிக்கல் இதுதான்.படம் பாரத்துவிட்டு மக்கள் சொல்லும் தீர்ப்பைத்தான் நான் பெரிதாகக் கருதுகிறேன். ஒத்தை செருப்பு படத்தையும் மக்களிடம் கொண்டு செல்ல ஊடகங்கள் எனக்குத் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வியாபார ரீதியாக இப்படம் வெற்றிபெறாது என்பதைப் புரிந்துகொண்ட பார்த்திபன் சமீப காலங்களில் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஒத்தச் செருப்பு போன்ற படத்தை என்னைப்போன்ற வடிகட்டிய முட்டாள் மட்டும்தான் எடுப்பான்’என்கிற அளவுக்கு உளறி ட்விட்டுகிறார்.

click me!