வேற லெவலுக்கு செல்லும் இயக்குநர் பா.ரஞ்சித்... அப்படி என்னதான் செய்யப்போறாரு..?

By Thiraviaraj RMFirst Published Jan 2, 2022, 4:41 PM IST
Highlights

 ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை, அதே சமூகப் பின்புலத்தில் இருந்து வந்த ஒருவர் பேசியது பெரிய விவாதத்தையும், அத்தகைய விவாதங்களுக்குப் புதிய களத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.
 

தமிழ் சினிமாவில் காலம் காலமாக சாதிக்கு எதிரான கருத்துகள், கதைகளைக் கொண்ட படங்கள் வெளிவந்திருந்தாலும் எந்த வகையிலும் நீர்த்துப் போகாத நிஜத்திற்கு நெருக்கமான அரசியலை சினிமாப்படுத்தி தன்னுடைய திரைப்படங்கள் மூலம் பல புதிய விவாதங்களை ஏற்படுத்தியவர் இயக்குனர் பா.ரஞ்சித்.

 2012-ஆம் ஆண்டு வெளியான 'அட்டக்கத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பா.ரஞ்சித், அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து வடசென்னையைக் கதைக்களமாக்கி இயக்கிய 'மெட்ராஸ்' திரைப்படம், மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகின் உச்சநட்சத்திரமான ரஜினிகாந்த்தை வைத்து 'கபாலி', 'காலா' படங்களை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இவ்விரு படங்களும் பேசிய அரசியல், தமிழ் சினிமாவிற்குப் புதியதில்லை என்றாலும், அதில் இருந்த காரம் தமிழ் சினிமாவிற்குப் புதிதானதே. ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை, அதே சமூகப் பின்புலத்தில் இருந்து வந்த ஒருவர் பேசியது பெரிய விவாதத்தையும், அத்தகைய விவாதங்களுக்குப் புதிய களத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.


சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இயக்கம் மட்டுமில்லாது பா.ரஞ்சித் தன்னுடைய நீலம் புரொடக்சன்ஸ் மூலம் படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். அவரது தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் அவரது தயாரிப்பில் வெளியான 'ரைட்டர்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

திரைப்படங்கள் மட்டுமல்லாது சமூக தளங்களிலும் மாற்றத்திற்கான பல்வேறு முன்னெடுப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார் பா.ரஞ்சித். இந்நிலையில்,  சோம்நாத் வாக்மேர் இயக்கும் ஆவணப்படத்தை இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிக்க இருக்கிறார்.

தன்னுடைய நீலம் புரொடக்சன்ஸ் மூலம் 'சைத்யபூமி' என்ற ஆவணப்படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த ஆவணப்படத்தை பிரபல ஆவணப்பட இயக்குனர் சோம்நாத் வாக்மேர் இயக்க இருக்கிறார். சட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கரின் நினைவிடம் சைத்யபூமி என்று அழைக்கப்படுகிறது. இந்த நினைவிடம் மராட்டிய மாநிலம் மும்பை தாதர் பகுதியில் உள்ளது.

Happy to announce will be collaborating as presenter for documentary filmmaker Somnath Waghmare's next, Chaityabhumi.
This film is about Chaityabhumi, the final resting place of Dr.Babasaheb Ambedkar in Dadar, Mumbai.

pic.twitter.com/b8wsh0nXLV

— pa.ranjith (@beemji)

 

இதுகுறித்த அறிவிப்பை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பா. ரஞ்சித், 'ஆவணப்பட இயக்குனர் சோம்நாத் வாக்மேர் அடுத்ததாக இயக்க இருக்கும் 'சைத்யபூமி' ஆவணப்படத்தை நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. இந்த ஆவணப்படம் மும்பை தாதர் பகுதியில் அமைந்துள்ள டாக்டர். பாபாசாகிப் அம்பேத்கரின் நினைவிடத்தைப் பற்றியது' என்று கூறியுள்ளார்.

click me!