'பருத்தி வீரன்' விவகாரம் குறித்து, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேச்சுக்கு பலர் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் இமையம் பாரதிராஜா அறிக்கை மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியாகி, திரையரங்கில் சுமார் 350 நாட்கள் ஓடி சாதனை படைத்த 'பருத்தி வீரன்' திரைப்படத்தின் கணக்கு வழக்கில், இயக்குனர் அமீர் குளறுபடி செய்துவிட்டதாக... சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படத்தின் லாப கணக்கை பற்றி பேச மறந்த ஞானவேல்... இப்படத்தை பாதியில் விட்டு ஓடியவர் என பல பிரபலங்கள் அடுத்தடுத்து அவரை வெளுத்து வாங்கி வரும் நிலையில், தற்போது இயக்குனர் இமையம் பாரதி ராஜாவும் உணர்வு பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுளளார்.
இந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது "திரு ஞானவேல் அவர்களே உங்களுடைய காணொளியை பார்க்க நேரிட்டது. ’பருத்திவீரன்’ திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது பொருளாதாரப் பிரச்சனையை சார்ந்தது மட்டுமே. ஆனால் நீங்கள் தந்த பேட்டியில் மிகச்சிறந்த படைப்பாளியின் புகழுக்கும் பெயருக்கும் படைப்புக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
உங்களை திரை துறையில் அடையாளப்படுத்தி மிகப்பெரும் தயாரிப்பாளராக உருவாக்கியதில் திரு அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை மறந்து விட வேண்டாம். ’பருத்திவீரன்’ திரைப்படத்திற்கு முன்பு அமீர் இரண்டு படம் இயக்கி அதில் ஒன்றை தயாரித்து உள்ளார். அவர் உங்கள் படத்தில் தான் வேலை கற்றுக் கொண்டார் என்பதை எக்காளமாக கூறி வன்மமாக சிரிப்பது என் போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும்.
ஏனெனில் உண்மையான படைப்பாளிகள் சாகும் வரை கற்றுக் கொண்டுதான் இருப்பார்கள். நான் இப்போதும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். மிகச்சிறந்த படைப்பாளியின் படைப்புகளையும் அவர் நேர்மையையும் இழிவுபடுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து, பிரச்சனையை சமூகமாக பேசி தீர்ப்பது சரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்’ என இயக்குனர் இமயம் பாரதிராஜா தெரிவித்துள்ளார்". இப்படி அடுத்தடுத்து ஞானவேல் ராஜாவுக்கு எதிராக பலர் கொந்தளித்து வரும் நிலையில், ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D