இதை மட்டும் செய்தீர்கள் என்றால்? மறக்க முடியாத முதல்வர் என உங்களை உயர்த்தி பிடிப்போம்... பாரதிராஜா வேண்டுகோள்!

Published : Aug 31, 2020, 12:55 PM ISTUpdated : Aug 31, 2020, 02:14 PM IST
இதை மட்டும் செய்தீர்கள் என்றால்? மறக்க முடியாத முதல்வர் என உங்களை உயர்த்தி பிடிப்போம்... பாரதிராஜா வேண்டுகோள்!

சுருக்கம்

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இயக்குநர் பாரதிராஜா கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதி முதலே படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளதால் ஏராளமான படங்கள் ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் சினிமாத்துறையை மட்டுமே நம்பி இருக்கும்  20 ஆயிரத்திற்கும் அதிகமான பெப்சி தொழிலாளர்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். 6 மாதத்திற்கும் மேலாக தமிழ்த் திரைப்படத்துறையில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து பசி, பட்டினியால் வாடி வருவதாக தெரிவித்த பெப்சி, சினிமா படப்பிடிப்புகளை நடத்த அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசு தொடர் கோரிக்கைகளை வைத்து வந்தது. 

திரையுலகம் முடங்கியதால் பெப்சி தொழிலாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் சம்பளம் இழப்பும் தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் சினிமா துறைக்கு மொத்தம் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே படப்பிடிப்பிற்கும், திரையரங்குகளை திறக்கவும் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டுமென நடிகர் சங்க, தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி சார்பில் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. 

இதனைத் தொடர்ந்து நேற்று செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார். அதில் பல்வேறு விஷயங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சினிமா படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் ஷூட்டிங்கை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது என நிபந்தனை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கிடந்த தியேட்டர்களை திறக்க தமிழக அரசு இந்த முறையும் அனுமதி அளிக்காதது திரைத்துறையினர், தியேட்டர் உரிமையாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இயக்குநர் பாரதிராஜா கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மதிப்பிற்குரிய தமிழக முதல்வருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் நன்றிகள்.

வணக்கம்!

இந்த காலகட்டத்தில் எங்கள் சங்கங்கள் சுய நிர்வாகமின்றி கட்டமைப்பு, உள்தேவைக்கான சுய முடிவுகள் எடுக்க முடியாமல் போனாலும், எங்களின் தேவைகளை அறிந்துகொள்ள உங்களிடம் வந்து கலந்துகொள்ள பெரும் உதவியாக இருந்தீர்கள்.

எப்போதெல்லாம் நாங்கள் சந்திக்கமுடியுமா எனக் கேட்டபோதெல்லாம் திரையுலகிற்காய் உங்கள் அனுமதிக் கதவுகளும்... பிரச்சனைகளை புரிந்துகொள்ள செவிகளும் காலந் தாழ்த்தியதே இல்லை. அதற்கு எங்கள் நன்றிகள். 

எங்கள் திரையுலகம் இருண்டுவிட்டதோ... திரும்ப தழைக்க அடுத்த ஆண்டு ஆகிவிடுமோ? பட்டினியால் பல குடும்பங்கள் வதங்கிவிடுமோ என்ற பதட்டமும், முடிவு தெரியா குழப்பமும் மேலிடத்தான், கடந்த 14 ஆம் தேதி தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக சின்னத் திரை படப்பிடிப்பு போலவாவது நடத்த அனுமதியுங்கள் எனக் கோரிக்கை வைத்தோம். 

இப்போதும்... கொரோனாவின் பரவல் சூழலில் தமிழக அரசு நினைத்திருந்தால் நாங்கள் படப்பிடிப்பிற்குச் செல்வதை முடக்கியே வைத்திருந்திருக்கலாம். ஆனால், அரசு கொடுத்த வழிமுறைகளைப் பின்பற்றி  முழுமையாக செயல்படுவோம் என்ற எங்களின் உறுதிமொழியையும். பட்டினியால் வாடுவோர்களையும் கருத்திற்கொண்டு படப்பிடிப்பிற்கு அனுமதியளித்ததை நன்றியோடு பார்க்கிறோம். 

அந்த கனிவைக் காட்டிய தமிழக முதல்வராகிய தங்களுக்கும், எங்கள் பிரச்சனைகளைக் கூர்ந்து கேட்டுக்கொள்ளும் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் நன்றிகள் பல.பணம் போட்ட தயாரிப்பாளர்கள், பண உதவி செய்தவர்கள் என எல்லோரும் இதனால் இழப்பிலிருந்து மீள முடியும். 

ஏற்கெனவே பிற்சேர்க்கைப் பணிகளுக்கு அனுமதி கொடுத்ததிலிருந்தே எங்களின் மீது நீங்கள் காட்டிய அக்கறையைப் புரிந்துகொண்டோம். தற்போது படப்பிடிப்புத் தளங்களுக்கும் செல்ல அனுமதி தந்துள்ளீர்கள். இன்னும் சில வரைமுறைகளோடு எங்கள் திரையரங்குகளையும் இயங்க ஆவண செய்வீர்கள் எனக் காத்திருக்கிறோம். 

முன்னமே நாங்கள் வைத்திருக்கும் கோரிக்கைகளையும் பரிசீலிக்கக் கேட்டுக் கொள்வதோடு, திரையரங்க வரிவிகிதங்களையும் குறைத்து சினிமா வாழ வழிவகை செய்தால் அத்தனை ஆயிரம் கலைக் குடும்பங்களும் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்களாவோம். 

திரையுலகம் மறக்க முடியாத ஒரு முதல்வரைப் பெற்றதென உயர்த்திப் பிடிப்போம். பிற்சேர்க்கை பணி செய்தாலும், படப்பிடிப்புத் தளம் சென்றாலும், நாங்கள் உண்மையாகவே மீளும் நாள் திரையரங்கங்கள் திறக்கும் நாள்தான். 

அதன் மூலமே எம் தயாரிப்பாளர்கள் முடக்கிய பணத்தைப் பெற முடியும். மக்களின் நலத்தின் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு சமூகப் பிரக்ஞைதானென்றாலும்... வழி  முறைகள் வகுத்துக் கொடுத்து திறந்துவிட மாட்டீர்களா என நப்பாசைப் படுகிறேன். ஆவண செய்ய அத்தனை சினிமா குடும்பங்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களெனவே காத்திருக்கிறோம். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!