
கோவை நாயகன் முருகானந்த்தின் கண்டுபிடிப்பைக் கருவாகக்கொண்டு எடுக்கப்பட்ட #PeriodEndofSentence' படம் ஆஸ்கார் விருது பெற்று தமிழர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கும் நிலையில், அவரது நண்பரும், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன்,இளையராஜா காம்பினேஷனில் ‘தமிழரசன்’ படத்தை இயக்கிவருபவருமான பாபு யோகேஷ்வரன் தனது முகநூல் பக்கத்தில் முருகானந்தம் தொடர்பான பழைய நினைவுகள் சிலவற்றைப் பகிர்ந்துள்ளார்.
என்னைவிட கடுமையான தோல்விகள், வலிகளுடன் அவர் இருந்தார். ஆனால் அவர் கையில் ஒரு விளக்கு இருந்தது. அவர் ஒன்றும் அலாவுதீன் இல்லைதான். ஆனால் அவரளவில் ஒரு அற்புத விளக்கு அது. நாப்கின் மேகிங் மெஷின். உலக அளவில் இந்த நாப்கின் தொழிலை இரண்டு மூன்று நிறுவனங்கள் மட்டுமே செய்து பெரும் செல்வம் கொழித்துக்கொண்டிருந்த காலம் அது. அதே சமயம் இந்தியாவின் எண்பதுக்கும் மேற்பட்ட கிராமப் புறப்பெண்களை இன்னும் சென்றடைந்திராத பொருள் அது. அவ்வளவு பெரிய வியாபாரப்பரப்பில் பெரு வணிக நிறுவனங்களைச் சாராமல் அந்தந்தப் பகுதி பெண்களே தங்களுக்கான நாப்கின்களை உருவாக்கி விற்றுக்கொள்ளமுடியும். ஒரு குடும்பத்துக்குத் தேவையான பணத்தை அவர்களே திரட்டிக்கொள்ளமுடியும்.
’இதுதான் அந்த மெஷின். பாபு… இதை என்ன பண்ணலாம் சொல்லுங்க…!’ என்று அவர் கேட்டபோது திகைத்துப்போனேன். அந்த மெஷினை சென்னைக்குக் கொண்டுவந்தோம். நானும் கேமிராமேன் ஆர்.டி. ராஜசேகரும் அவரும் சேர்ந்து தொடங்கிய திரைப்பட நிறுவனத்தின் அலுவலகத்தின் மத்தியில் அந்த மெஷினை வைத்தோம். வெவ்வேறு முதலீட்டு நிறுவனங்கள், ஆலோசகர்களை சந்தித்து அந்த மெஷினின் வியாபார சாத்தியங்களை விளக்கி நகர்த்த முயற்சித்தோம். பணம் இருந்தால் எதையும் செய்துவிடலாம் என்ற சிந்தனை எங்களை ஆக்கிரமித்திருந்த காலம் அது. அது இல்லாததால் ஆட்டத்தைக் கலைத்து மீண்டும் பிரிந்தோம்.
‘மீண்டும் பத்து ஆண்டுகள் கழித்து 2016-ல் அவரை சந்தித்தபோது அவர் உலக அளவில் முக்கியமான தொழில் முனைவராகவும், தன் கண்டுபிடிப்பை ஒரு பெரிய சமூகப் புரட்சியாகவும் மாற்றியிருந்தார். பில்கேட்ஸும் ரத்தன் டாட்டாவும் நாள்கணக்கில் நேரம் ஒதுக்கி அவருக்காகக் காத்திருந்தார்கள். ட்விங்கிள் கண்ணாவும் அக்ஷய்குமாரும் அவரோடு தரையில் அமர்ந்து ரசம் சாதம் சாப்பிட்டபடி ‘பேட் மேன்’ படம் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.
அந்த இரவில் அவர் ஒரு செய்தி சொன்னார்: நாம நினைக்கறத அடையறதுக்கு பணம்தான் முக்கியம்னு பேசிக்கிட்டிருப்போம் இல்ல… அது தப்பு… பணம் தேவையில்லன்னு எப்ப உணர்றமோ அப்பத்தான் நம்ம ட்ராவல் ஸ்டார்ட் ஆகுது…! இப்ப நான் பணத்தைத் தேடல… மனிதர்களைத் தேடறேன்’ என்றார். வாழ்த்துக்கள் சார்! இன்னும் நிறைய உயரங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. #PeriodEndofSentence
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.