#BREAKING பிரபல இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 30, 2021, 7:30 AM IST
Highlights

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று அதிகாலை 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 

தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, முன்னணி இயக்குநராக வலம் வந்தவர். இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி உள்ளார். 1995-ஆம் ஆண்டு அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் திரைப்படமான ‘தென்மாவின் கொம்பத்து’ என்ற மலையாள படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருது பெற்றவர். 1999ஆம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த முதல்வன் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ததற்காக பாராட்டப்பட்டவர். செல்லமே, விரும்புகிறேன், முதல்வன், நேருக்கு நேர், காதல் தேசம் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். 

கனா கண்டேன் திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான கே.வி.ஆனந்த், அதன் பின்னர் அயன், கோ, கவன், காப்பான், மாற்றான், அநேகன் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தன்னுடைய அடுத்த படத்தை இயக்குவதற்கான பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இயக்குநர் கே.வி.ஆனந்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று அதிகாலை 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 

54 வயதான கே.வி.ஆனந்த் ஒருமுறை கூட உடல் நலக்குறைவால் மருத்துமனையில் அனுமதிக்கப்படாத நிலையில், திடீரென அவர் உயிரிழந்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது வரை அவருடைய உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இறுதிச்சடங்கு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அதிகாலையிலேயே இடியாய் இறங்கிய கே.வி.ஆனந்தின் மரணச் செய்தியை கேட்டு அதிர்ச்சியான திரையுலகினர் பலரும் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் விவேக்கை இழந்த திரையுலகம் அதிலிருந்து மீள்வதற்கு முன்னரே தற்போது கேவி ஆனந்த் அவர்களை இழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!