லைக்காவை தெறிக்கவிட்ட லோக்கல் சேனல்கள் !! தர்பார் படத்தை ஒளிபரப்பியதால் அதிர்ச்சி !!

By Selvanayagam PFirst Published Jan 13, 2020, 10:04 PM IST
Highlights

ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் மதுரை, திருச்சி உள்ளிட்ட பல ஊர்களில்  லோக்கல் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த திரைப்படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படம் கடந்த  9-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. அனிருத் இசையமைப்பில் உருவான இந்தப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். மேலும் இந்தப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

தர்பார் திரைப்படம் வெளியான மறுநாளே முழு படமும் பல பார்ட்களாக வாட்ஸ் அப்பிலேயே பகிரப்பட்டது. அத்துடன் படம் குறித்த தவறான தகவல்களும் வாட்ஸ் அப் குழுக்களில் பரப்பப்பட்டு வந்தது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு லைக்கா நிறுவனம் சைபர் க்ரைம் போலீஸுக்கு புகார் மனு அளித்து இருந்தனர்.

இந்த நிலையில் மதுரையில்   உள்ள லோக்கல்  டிவி சேனல் ஒன்றில் தர்பார் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. ஜனவரி 12 ஆம் தேதி, மதுரை அருகில் இயங்கும் சரண்யா கேபிள் டிவி நெட் ஒர்க் நிறுவனம் சட்ட விரோதமாக தர்பார் படத்தை ஒளிபரப்பி உள்ளனர்.

இதே  போல் திருச்சியிலும் உள்ள லோக்கல் தொலைக்காட்சிகளில்  தர்பார் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்தப்புகாரில், ‘திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் படம் டிவியில் ஒளிபரப்பப் பட்ட சம்பவத்தால், ‘ லைக்கா நிறுவனத்துக்கும் மதுரை விநியோகஸ்தருக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அது மட்டுமல்லாமல் இது தமிழ் சினிமாவின் வளர்ச்சியை சீரழிப்பதாகவும் உள்ளது’ என்று கூறி இதுகுறித்து கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

click me!