Vijay : விஜய்யின் சினிமா எண்ட்ரி முதல் அரசியல் பயணம் வரை... தளபதி கடந்து வந்த பாதை!

Published : Jun 21, 2025, 03:06 PM IST
TVK Vijay

சுருக்கம்

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சினிமா மற்றும் அரசியல் பயணத்தை பற்றிய தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

Cinema and Political Journey of Thalapathy Vijay : இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் - பாடகி ஷோபா தம்பதிக்கு கடந்த 1974-ம் ஆண்டு ஜூன் மாதம் 22ந் தேதி பிறந்த நடிகர் விஜய். 1984-ம் ஆண்டு வெற்றி என்கிற திரைப்படத்தின் மூலம் தனது தமிழ் திரையுலக வாழ்க்கையின் முதல் அடியை 10 வயதில் எடுத்து வைத்தார். பின்னர் படிப்படியாக திரையுலகில் காலடியைப் பதித்த நடிகர் விஜய், தனது 18வது வயதில் நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் ஒரு இடத்தை தக்கவைத்தார். பின்னர் அடுத்தடுத்து ஒரு சில படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தார். அவற்றில் பூவே உனக்காக, லவ் டுடே, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி ஆகிய முக்கிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார் விஜய்.

கடந்த 1998-ம் ஆண்டு தமிழக அரசால் வழங்கப்படும் கலைமாமணி விருதை பெற்றார் விஜய். இதையடுத்து கடந்த 2004-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த முதல் தமிழ் படம் என்கிற பெருமையை பெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்து விஜய் நடித்த திருப்பாச்சி, போக்கிரி, சிவகாசி போன்ற படங்கள் அவருக்கு வெற்றியை தேடித்தந்தன. தொடர் வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், வணிக ரீதியாக வசூல் மன்னனாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். இப்படி சிறு சிறு வெற்றிகளை தொடர்ந்து கடந்த 2010 முதல் 2020 வரை அவர் நடிப்பில் வெளியான துப்பாக்கி, கத்தி, மெர்சல், சர்க்கார் போன்ற படங்கள் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

விஜய்க்கு 275 கோடி சம்பளம்

பின்னர் அட்லீ இயக்கிய பிகில் படம் மூலம் 300 கோடி கிளப்பில் இணைந்த விஜய், அடுத்தடுத்து மாஸ்டர், வாரிசு, லியோ, கோட் என வெற்றிப்படங்களை கொடுத்தது மட்டுமின்றி தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் உருவெடுத்தார். இவர் தற்போது ஜனநாயகன் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இது தான் விஜய்யின் கடைசி படமாகும். இப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ.275 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் வருகிற 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்து வந்த நடிகர் விஜய்க்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகின. இந்த ரசிகர் பட்டாளம் காலப்போக்கில் விஜய் மக்கள் இயக்கமாக மாறியது. இந்த மக்கள் இயக்கம் படிப்படியாக அரசியல் பக்கம் பயணிக்க தொடங்கியது. கடந்த 2009-ம் ஆண்டு தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றிய விஜய், அதன்பின்னர் ஒரு கொடியினை அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார் விஜய். அதோடு திரையுலகில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், அரசியலில் நுழையப்போவதாகவும் அறிவித்தார். 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தான் தன்னுடைய டார்கெட் என்று ஓப்பனாக அறிவித்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

விஜய்யின் அரசியல் சம்பவங்கள்

அதுமட்டுமின்றி தமிழகத்தில் பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு கல்வி விருது விழா ஒன்றை கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார் விஜய். அவர்களுக்கு விருது மட்டுமின்றி கல்வி ஊக்கத் தொகையும் வழங்கி கெளரவித்து வருகிறார் விஜய். விஜய்யின் அரசியல் வருகைக்கு பின்னர் அவர் சந்தித்த விமர்சனங்கள் ஏராளம். விஜய் படத்தை பார்க்க வேண்டுமானால் கூட்டம் வரும், விஜய்யை அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்ள யாரும் வரமாட்டார்கள் என விமர்சித்தவர்கள் மூஞ்சில் கரியை பூசும் விதமாக இந்தியாவே வியந்து பார்க்கும் அளவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்தி அரசியல் கட்சிகளை மிரள வைத்தார்.

பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்த வந்தார் விஜய். இதனால் அவர் ஒர்க் பிரம் ஹோம் அரசியல் செய்வதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அதையெல்லாம் தவிடுபொடி ஆக்கும் விதமாக பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போராட்ட களத்திலேயே சந்தித்து அவர்களுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். அதுமட்டுமின்றி அவர் கோவைக்கு பூத் கமிட்டி மீட்டிங்கிற்காக சென்றபோது அங்கு விமான நிலையத்தில் விஜய்யை காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டதால் கோவையே ஸ்தம்பித்து போனது. இதன்பின்னர் மதுரைக்கு ஜனநாயகன் பட படப்பிடிப்பிற்காக விஜய் வந்தபோது அங்கிருந்து அவர் கொடைக்கானல் செல்லும் வழிநெடுக, அவரது ரசிகர்கள் நடத்திய ரோடு ஷோ பிரம்மிப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆண்டு ஒரு அரசியல் தலைவராக தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் விஜய், அடுத்த ஆண்டு தமிழக முதல்வராக தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனால் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ பெருமளவில் வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர். விஜய்யின் முதல்வர் கனவு பழிக்குமா... 2026ம் ஆண்டு தேர்தலில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!