அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் காமெடி நடிகர் செந்தில்!

By manimegalai aFirst Published Mar 11, 2021, 1:16 PM IST
Highlights

 பிரபல நகைச்சுவை நடிகர், செந்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்து தன்னை பாஜக கட்சியில் சற்றுமுன் இணைத்து கொண்டுள்ளார். 
 

கடந்த சில மாதங்களாகவே நாடு முழுவதும் உள்ள திரைப்பிரபலங்கள் பலரும் பாஜகவில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர். பிரதமர் மோடியின் திட்டம் மற்றும் செயல்பாடுகளால் கவரப்பட்டு பாஜகவில் இணைவதாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நடிகை குஷ்புவைத் தொடர்ந்து பல நடிகர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகனும், பிரபல தயாரிப்பாளருமான ராம்குமார் குடும்பத்தோடு பாஜகவில் இணைந்தார் என்பது நாம் அறிந்தது தான்.

அதனைத் தொடர்ந்து நடன இயக்குநர் கலா, பாஜக கட்சியில் இணைந்தார். மேலும் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன், பிரபல நடிகை ராதா, மற்றும் குணச்சித்திர நடிகர் தேவன், பாலிவுட் பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர்.

இவர்களை தொடர்ந்து, பிரபல நகைச்சுவை நடிகர், செந்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்து தன்னை பாஜக கட்சியில் சற்றுமுன் இணைத்து கொண்டுள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான செந்தில், நடிகர் கவுண்டமணியுடன்  இணைந்து நடித்த பல காமெடி காட்சிகள் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. திரைப்பட வாய்ப்புகள் குறைந்த பின்னர், அவர் தன்னை அதிமுக கட்சியில் இணைத்துக் கொண்டு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர், அதிமுக கட்சி இரண்டாகப் பிரிந்தபோது, அதிமுகவில் இருந்து விலகி அமமுக-வில் இணைத்துக் இணைந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு அமமுக கட்சியில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேர்ந்த நடிகர் செந்தில், தற்போது அதிமுகவில் இருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்துள்ளார். எனவே இவர் பாஜக கட்சிக்கு ஆதரவாக சட்டமன்ற தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!