நடிகர் விஜய்க்கு மேலும் ஒரு சோதனை…. நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! | Actor Vijay

By manimegalai aFirst Published Nov 15, 2021, 7:41 AM IST
Highlights

Actor Vijay | திடைப்பட ஆடியோ வெளியீட்டு விழாக்களில் விஜய் பேசுவதெல்லாம், தமிழ்நாடு அரசியலில் புயலைக் கிளப்பும். சமீபத்தில் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு வெற்றி பெற்றது அவரது அரசியல் வருகைக்கான அடித்தளம் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா என கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஜய். நேரடியாக அறிக்கை, பத்திரிகையாளர் சந்திப்பு இப்படி எதையும் அடிக்கடி செய்யாவிட்டாலும், விஜய் குறித்த ஒரு வரிச் செய்தி கூட தலைப்புச் செய்திகளாக மாறிவிடுகின்றன. விஜய்யின் அரசியல் வருகை எப்போது என்பது தான் கோடம்பாக்கத்தின் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.

கடந்த சில மாதங்களாகவே விஜய்-க்கு சோதனையும், சாதனையும் மாறி மாறி கிடைத்துள்ளது. கடைசியாக மாஸ்டர் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றாலும், அவரது வீட்டில் நடைபெற்ற வருமான வரிச்சோதனை விஜய்க்கு நெருக்கடியை கொடுத்தது. அதையெல்லாம் ஒற்றை செல்பியில் ஊதித்தள்ளிய விஜய், சட்டமன்ற தேர்தலில் சைக்கிளில் வந்து வாக்களித்து பல்வேறு வாதங்களுக்கு வித்திட்டார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக கூறப்படுகிறது. BEAST படப்பிடிப்பு முடிவதற்குள் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்தது. ஆனால் விஜய் உடன் அவரது தந்தை மோதலில் ஈடுபட்டு வருவது விஜய்க்கு மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களுக்கும் நெருக்கடியை கொடுத்தது. தனது பெயரை பயன்படுத்தக் கூடாது என்று தமது தாய், தந்தைக்கு எதிராகவே விஜய் நீதிமன்றத்தை நாடியது அவருக்கு சோதனையான காலமாக பார்க்கப்பட்டது.

அதேபோல், சொகுசு காருக்கு நுழைவு வரியில் விலக்கு கேட்ட விவகாரத்தில் விஜயை அவமானப்படுத்தும் வகையில் உயர்நீதிமன்றத்தின் கருத்துகள் அமைந்திருந்தது. வரியை செலுத்த ஒப்புக்கொண்ட விஜய், நீதிபதியின் கருத்துக்கு எதிராக மேல் முறையீடு செய்து அதில் கிட்டத்தட்ட வெற்றியும் கண்டார். இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் முதல் பலரும் விஜய் பக்கமே நின்றனர். இப்படியான சோதனையான காலக்கட்டத்தில் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசியல் நடவடிக்கைகளுக்கு விஜய் பச்சைக் கொடி காட்டினார்.

சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேட்சையாக போட்டியிட்டனர். அவர்கள் தமது பெயரையும், இயக்கத்தின் கொடியையும் பயன்படுத்த விஜய் பச்சைக் கொடி காட்டினார். தேர்தலிலும் விஜய் ரசிகர்கள் கணிசமான இடங்களை கைப்பற்றி வெற்றிக்கொடியை நாட்டினர். விஜய்யின் அரசியல் வருகைக்கு இது ஒரு அடித்தளம் என்றும் பலராலும் கூறப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளை சமீபத்தில் சென்னை நீலாங்கரையில் உள்ள தமது பங்களாவிற்கு வரவழைத்த விஜய், அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி புகைபப்டமும் எடுத்துக்கொண்டார்.

இந்தநிலையில் தான் அடுத்த சோதனையாக நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்றிரவு காவல் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்தது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்கு பின் அது புரளி என தெரியவந்தது. மிரட்டல் அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை செய்தபோது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவணேஸ்வரன் என்பது தெரியவந்தது. புவணேஸ்வர் வழக்கமாக வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர் என்றும் இவர் ஏற்கெனவே பல அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் புரளி என்ற செய்தி விஜய் ரசிகர்களை நிம்மதி அடையச் செய்துள்ளது.

click me!