’நீதி மன்ற உத்தரவை மீறி ‘அக்னி தேவி; படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்...என்னங்க நடக்குது இங்கே?...புலம்பும் நடிகர் பாபி சிம்ஹா...

By Muthurama LingamFirst Published Mar 23, 2019, 2:34 PM IST
Highlights

’அக்னிதேவி’ படத்துக்கு  தடை வாங்கியதற்கு அனைத்து ஆதாரங்களையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பிய பிறகும்  படத்தை வெளியிடுகிறார்கள் என்றால் அது நீதிமன்ற அவமதிப்புதான். இதற்குப் பின், ஏதோ பெரிய அரசியல் நடக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது’ என்கிறார் அப்படத்தின் நாயகன் பாலி சிம்ஹா.


’அக்னிதேவி’ படத்துக்கு  தடை வாங்கியதற்கு அனைத்து ஆதாரங்களையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பிய பிறகும்  படத்தை வெளியிடுகிறார்கள் என்றால் அது நீதிமன்ற அவமதிப்புதான். இதற்குப் பின், ஏதோ பெரிய அரசியல் நடக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது’ என்கிறார் அப்படத்தின் நாயகன் பாலி சிம்ஹா.

பாபிசிம்ஹா நாயகனாக நடித்துள்ள ’அக்னிதேவி’ படம் மார்ச் 22 அன்று வெளியாகியிருக்கிறது. எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தை, ஜான்பால்ராஜ் – ஷார் சூர்யா ஆகிய இருவரும் தயாரித்து, இயக்கியிருக்கிறார்கள். அரசியல் த்ரில்லர் கதையான இதில், பாபி சிம்ஹாவுக்கு காவல்துறை அதிகாரி வேடம், நடிகை மதுபாலா ஜெயலலிதாவை நினைவூட்டும் வில்லி வேடத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தில் 5 நாட்கள் மட்டுமே நடித்துவிட்டு வெளியேறிய பாபி சிம்ஹா,’’ முதல்ல கதை எனக்குப் பிடித்ததால்தான் இதில் நடிக்கச் சம்மதிச்சேன். ஜூன் முதல் செப்டம்பர் வரை இந்தப் படத்தில் நடிக்க 25 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருந்தேன். முதல்நாள் ஷூட்டிங்கில் எந்தப் பிரச்னையும் இல்லை. இரண்டாவது நாள் பாடல் காட்சியைப் படமாக்கும்போது, டான்ஸ் மாஸ்டரே இல்லை. `மாஸ்டர் யார்?’ என்றால், `இவன்தான் மாஸ்டர், என் மச்சான். சூப்பரா டான்ஸ் ஆடுவான். டான்ஸ் ஸ்கூல் வெச்சிருக்கான்’ என ஒருவரை அறிமுகப்படுத்தினார்கள். அப்போவே அவர்மேல சந்தேகம் வந்தது. ஆக்‌ஷன் சீக்வென்ஸ்ல நடிக்கிறதுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் தேவை. ஆனா, ரோப்கூட இல்லாமல் ஆக்‌ஷன் சீன்ல நடிக்கச் சொன்னார். 

`கொஞ்சம் பட்ஜெட் பிரச்னை, கோபப்படாம நடிங்க சார்’னு கேட்டதால, அதுக்கும் ஓகே சொன்னேன். ஆனா, அடுத்தடுத்த நாள்களில் இயக்குநரின் நடவடிக்கைகள் வித்தியாசமா இருந்தது. எனக்கும், மதுபாலா மேடமுக்கும் காம்பினேஷன் சீன்ஸ் இருந்தது. ஆனா, ஷூட் பண்றப்போ அவங்க இல்லை. கேட்டதுக்கு, `அவங்க இன்னைக்கு வரல. உங்களுக்கான சீன்ஸ் எடுக்கலாம்’னு சொல்லி, எனக்கு க்ளோஸ்அப் வெச்சு எடுத்தாங்க. அவங்களுக்கும் அதைத்தான் பண்ணியிருக்காங்க. தவிர, என்கிட்ட சொன்ன விஷயங்களைப் படமாக்கவில்லை. படத்தில் பல அரசியல் வசனங்களைத் திணிச்சிருந்தாங்க. அதெல்லாம் பிடிக்காமதான், ஐந்து நாள் நடிச்சுட்டு படத்திலிருந்து விலகிட்டேன். ‘பாபி சிம்ஹா இல்லாமலேயே படத்தை எடுத்துக்காட்டுறேன் பாருங்க’னு அங்கே இருக்கிறவங்ககிட்ட சொல்லியிருக்கார், இயக்குநர். நான் வெளிய வந்தபிறகு என்கிட்ட அவங்க பேசவே இல்லை.

அதுக்காக அவர்மீது வழக்கு தொடர்ந்தேன். கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்துக்கிட்டு இருந்தபோது, நான்கு முறை வாய்தா கேட்டாங்க. கடந்த வாரம் வரச் சொல்லியிருந்தாங்க. ஆனா, பொள்ளாச்சி சம்பவம் காரணமா வழக்கு நடக்கல. அதைப் பயன்படுத்திக்கிட்டு, `அக்னி தேவி’ எனப் படத்தின் பெயரை மாற்றி, படத்தின் அடுத்த டிரெய்லரை ரிலீஸ் பண்ணி, இன்னைக்குப் படமும் ரிலீஸ்னு அறிவிச்சிருக்காங்க. வழக்கு நிலுவையில் இருக்கும்போது, படத்தை ரிலீஸ் பண்றது நீதிமன்றத்தை அவமதிக்கிறதுச் சமம். இந்தப் படத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆள்மாறாட்டம் பண்ணி ஏமாத்தியிருக்காங்க. சினிமாவைக் கலையாக மதிக்கிற யாரும் இப்படிப் பண்ணமாட்டாங்க. இந்தப் படத்துக்குத் தடை விதிக்கணும். இந்தப் படம் வெளியானால், என் எதிர்காலம் பாதிக்கும்’என்று  பாபி சிம்ஹா கூறியிருக்கிறார்.

இந்த வழக்கில் இருக்கும் உண்மைத் தன்மையைக் கண்டறிய நீதிமன்ற ஆணையாளராக கார்த்திகா என்ற வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அறிக்கையைச் சமர்பித்து, நீதிமன்றம் மறுஉத்தரவு கொடுக்கும் வரை இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாபிசிம்ஹா கூறுகிறார்.

ஆனால், க்யூப் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடம் இதுபற்றிக் கேட்டால், இந்தப் படத்தின் தடை பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் எங்களுக்கு வரவில்லை.அதனால் படம் வெளியாகியிருக்கிறது என்கின்றனர்.

பாபிசிம்ஹாவோ, இந்தப் படத்துக்குத் தடை வாங்கியதற்கு அனைத்து ஆதாரங்களையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பியிருக்கேன். ஆனாலும், படத்தை வெளியிடுகிறார்கள் என்றால் அது நீதிமன்ற அவமதிப்புதான். இதற்குப் பின், ஏதோ பெரிய அரசியல் நடக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதையும் நான் சட்டப்படி சந்திக்கத் தயார் என்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாகப் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஜான் பால்ராஜ் யாரிடமும் எதுவும் பேசவில்லை. அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று பலரும் சொல்கின்றனர். சிக்கல் என்று வந்த பிறகு ஒரு தரப்பில் இருக்கும் பாபிசிம்ஹா தேடித் தேடி ஊடகங்களிடம் பேசுகிறார். ஆனால் இன்னொரு தரப்பான தயாரிப்பாளர் ஓடி ஒளிவது ஏன்? என்பது எல்லோருடைய கேள்வியாக இருக்கிறது.

click me!