பாபர் மசூதி தீர்ப்பு நாளில் இப்படி செஞ்சிட்டீங்களே... கொதிக்கும் இயக்குநர் பா.ரஞ்சித்..!

By Thiraviaraj RMFirst Published Nov 11, 2019, 4:17 PM IST
Highlights

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு அளித்த நாளினை பயன்படுத்திக் கொண்டு மேலவளவு சாதி வெறி படுகொலையர்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது தவறு என இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மேலவளவு ஊராட்சித் தலைவராக இருந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகேசன் உட்பட 7 பேர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த 13 பேர் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே மேலவளவில் இருபது ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தையே உலுக்கிய சாதிய கொலைச் சம்பவம் நடந்தது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உச்ச நீதிமன்றம் வரை அப்பீல் செய்தும் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தனர். பத்து வருட காலமாக தண்டனை அனுபவித்து வந்த இவர்களை எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று மேலூர் தொகுதி அ.தி.மு.க, எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் கோரிக்கை வைத்தார்.

விடுதலை செய்யக் கூடாது என்று தலித் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் 13 பேரும் விடுதலை செய்ய அரசால் உத்தரவிடப்பட்டு கடந்த 9-ம் தேதி அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளிவந்த பரபரப்புக்கிடையில் சின்ன ஓடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், ராமர், சர்க்கரை மூர்த்தி, ஆண்டிசாமி ஆகியோர் மதுரை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் இயக்குநர் பா.ரஞ்சித், ’’பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு அளித்த நாளினை பயன்படுத்திக் கொண்டு, மதுரை மேலவளவில் சாதி வெறி படுகொலையை நிகழ்த்திய 13 குற்றவாளிகளுக்கும் தமிழக அரசு நன்னடத்தை அடிப்படையில் திடீர் விடுதலை அளித்திருக்கிறது. இது மிக மோசமான முன்னுதாரணமாக அமையக்கூடும். வன்மையான கண்டனங்கள்’’எனத் தெரிவித்துள்ளார். 

 

click me!