
பாடகி லதா மங்கேஷ்கர் நான்கு வயதிலேயே பாடத்தொடங்கி, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இந்திய திரையுலகில், மிகச்சிறந்த பின்னணிப் பாடகியாக புகழ் பெற்று விளங்கினார். அவர் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது திடீர் மறைவுக்கு திரையுலகினரும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சமூக வலைதளத்தில் லதா மங்கேஷ்கருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, அன்பு, மரியாதை மற்றும் பிரார்த்தனைகள்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி லதா மங்கேஷ்கருடன் பணியாற்றிய அனுபவங்கள் மற்றும் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் குறித்து பேசி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். அதில் அவர் கூறியதாவது: நம் அனைவருக்கும் இன்று மிகவும் சோகமான நாள். லதா மங்கேஷ்கர் சிறந்த பாடகி மட்டுமல்ல, அவர் நம் ஒவ்வொருவரின் இதயங்களிலும் நிறைந்திருப்பவர். அவரின் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது.
எனது தந்தையின் அறையில் லதா மங்கேஷ்கரின் புகைப்படம் இருக்கும். தினந்தோறும் அவரது முகத்தில் தான் முழிக்க வேண்டும் என்பதற்காக அவர் அந்த புகைப்படத்தை அங்கு வைத்திருந்தார். அவரைப்பார்த்த உத்வேகத்துடன் ரெக்கார்டிங்கிற்கு செல்வார். நானும் அவருடன் சில பாடல்களில் பணியாற்றி உள்ளேன், சில பாடல்களை அவருடன் இணைந்து பாடியுள்ளேன். மேலும் சில நிகழ்ச்சிகளிலும் அவருடன் பங்கெடுத்துள்ளேன்.
எனக்கு இசையின் மீது ஆர்வம் அதிகம் இருந்ததால், பாடல் பாடுவதில் அவ்வளவு கவனம் செலுத்தாமல் இருந்து வந்தேன். லதா மங்கேஷ்கருடன் பணியாற்றியபோது தான் பாடல் பாடுவதிலும் கவனம் செலுத்த தொடங்கினேன். ஏனெனில், அவர் ஒவ்வொரு பாடல் பாடும் போதும் அதற்கு முன் பயிற்சி எடுப்பார். ஒவ்வொரு வரிகளையும் உச்சரிப்பு சரியாக வருகிறதாக என மெல்ல மெல்ல சொல்லிபார்ப்பார்.
ஒருமுறை எனது ஸ்டூடியோவிலும் அவர் அவ்வாறு செய்ததைப் பார்த்தபோது வாயடைத்துப் போனேன். அவரிடம் அப்போது கற்றுக்கொண்ட அந்த விஷயத்தை இன்றுவரை எந்த பாடல் பாடினாலும், எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் பின்பற்றி வருகிறேன். அவரது பாடல்கள் பல்லாயிரக்கணக்கான பாடகர்களுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. இனி நாம் செய்யவேண்டியது என்னவென்றால், அவர் நம்மிடம் விட்டுச் சென்ற பாடல்களை கொண்டாடுவோம், அதிலிருந்து நிறைய கற்றுக்கொள்வோம்” என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.