மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மக்கள் விரோதியான கதை... மண்டியிட வைக்கும் ‘மண்டி’ விவகாரம்..!

By Vishnu PriyaFirst Published Nov 3, 2019, 5:41 PM IST
Highlights

பிரம்மாண்டமான திரைப்பட விருது வழங்கும் விழா அது. விஜய்சேதுபதியை பாராட்டித் தள்ளிக் கொண்டிருந்தனர் ஆளாளுக்கு. யதார்த்த கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்தாலும் கூட வசூல் மற்றும் மாஸ் மன்னனாக உருவெடுக்கிறார்! என்று புகழ்ந்து கொட்டினர். அப்போது மைக் பிடித்த அந்த பிரபல இயக்குநர்  ‘விஜய்சேதுபதியை ஏன் மக்களுக்கு பிடித்திருக்கிறதென்றால், ஏதோ நம் வீட்டின் பக்கத்தில் மளிகைக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சியின் மகனை போலவோ! அல்லது மளிகைக்கடையை வைத்திருக்கும் கட்டழகு இளைஞன் போலவோ அவர் இருப்பதால்தான்.’ என்றார். கைதட்டல் பிய்ச்சுக்கிச்சு. 

பிரம்மாண்டமான திரைப்பட விருது வழங்கும் விழா அது. விஜய்சேதுபதியை பாராட்டித் தள்ளிக் கொண்டிருந்தனர் ஆளாளுக்கு. யதார்த்த கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்தாலும் கூட வசூல் மற்றும் மாஸ் மன்னனாக உருவெடுக்கிறார்! என்று புகழ்ந்து கொட்டினர். அப்போது மைக் பிடித்த அந்த பிரபல இயக்குநர்  ‘விஜய்சேதுபதியை ஏன் மக்களுக்கு பிடித்திருக்கிறதென்றால், ஏதோ நம் வீட்டின் பக்கத்தில் மளிகைக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சியின் மகனை போலவோ! அல்லது மளிகைக்கடையை வைத்திருக்கும் கட்டழகு இளைஞன் போலவோ அவர் இருப்பதால்தான்.’ என்றார். கைதட்டல் பிய்ச்சுக்கிச்சு. 

ஆனால் இன்று அதே ’அண்ணாச்சி’களால் விஜய்சேதுபதியின் முகத்தில் கருப்புச்சாயம் பூசப்படுவது, விஜய்சேதுபதியின் தலைவிதியா அல்லது அவரே செய்த சதியா? ஆக்சுவலாக விஜய்சேதுபதி ‘நடிகன்’ ஆக வேண்டுமென்றெல்லாம் துடிப்பாய் இருந்ததில்லை. கூத்துப்பட்டறையின் அலுவலக நிர்வாகத்தில் சம்பளத்துக்கு பணியாளராக வேலையில் சேர்ந்தாராம். அங்கு நடிப்புக் கலை கற்றுத்தருவதை கவனித்தவர் அப்படியே தேர்ந்திருக்கிறார். அதன் பின் யதார்த்த வாழ்வியலை கதைகளாக வடிக்கும் இயக்குநர் சீனுராமசாமியின் பார்வையில் விழுந்து இன்று  இம்மாம் பெரிய உச்சத்தை தொட்டிருக்கிறார். 

விஜய் சேதுபதியின் படங்கள் வசூல் வாரி குவிக்க துவங்கியபோது சிலர் அவரிடம் ‘அதிரடி மாஸ் ஹீரோ’ கதைகளை சொல்லினர். அதற்கு ’நண்பா இது நமக்கு செட் ஆவாது. மக்கள் என்னை  யதார்த்தமா பார்த்துப் பழகிட்டாய்ங்க. நான் அப்படியே போயிடுறேனே!’ என்று நல்லபிள்ளையாக மறுத்தார். அதையும் தாண்டி அவர் மாஸ் ஹீரோத்தனம் காட்டிய றெக்க! சேதுபதி! கவண் ஆகியவற்றில் சேதுபதி மட்டுமே மாஸ் ஹிட். மற்ற இரண்டும் என்ன கதையென்று அவருக்கே நன்கு தெரியும். 

யதார்த்த கதைகளில் மாஸ் நாயகனாக நடிக்க விஜய்சேதுபதியை விட்டால் இன்று வேறு ஆளில்லை! என்று தமிழ் சினிமா மட்டுமல்ல, பக்கத்து மாநிலமான கேரளாவின் திரையுலகமும் முடிவு செய்துவிட்டது. அப்படித்தான் வி.சேதுபதியின் கிராப் ஏறிக் கொண்டிருந்தது. மெகா சேனல் ஒன்று அவரை வைத்து ஞாயிற்றுக் கிழமையில் பிரைம் ஸ்லாட்டில் ஒரு ப்ரோக்ராம் பண்ணுமளவுக்கு மனிதர் எங்கோ சென்றார். நயன் தாராவெல்லாம் வேண்டி விரும்பி கேட்கும் ஹீரோவானார். 

விஜய் சேதுபதியின் வெற்றிக்கு காரணம் ‘புகழ் போதையை தலையில் ஏற்றிக்காத அடக்கம் தான்’ என்று கோலிவுட் புகழ்ந்து கொண்டாடியது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் ஆப்படிக்கும் விதமாக கடந்த சில காலமாக அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளதுதான் கொடுமையே. இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக்கை தயாரிக்க ஒரு சினிமா நிறுவனம் முடிவெடுத்தது. அதில் விஜய்சேதுபதி நடித்தால் பக்காவாக இருக்குமென முடிவு செய்து அவரை புக் செய்தனர். அவரும் கதை ஆலோசனையில் அமர்ந்தார். இந்த விஷயம் வெளியே தெரிந்ததும் தமிழ் உணர்வாளர்கள் கொதித்தனர். காரணம், ”முத்தையா தமிழ் வம்சாவளி மனிதராயினும், அவரது விஸ்வாசம் முழுக்க சிங்களர்களுக்குதான். ஈழ படுகொலைக்கு மனம் வருந்தாதவர், இறுதிப்போருக்கு பின் ’இனி இலங்கையில் அமைதி திரும்பும்’ என்று கொக்கரித்த துரோகி. எனவே இவரது கதையில் மக்கள் செல்வனான விஜய்சேதுபதி நடிக்க கூடாது.” என்று கடல் கடந்த நாடுகளில் இருந்தும் கோரிக்கைகள் கிளம்பின. 

உடனே விஜய்சேதுபதி அந்த ப்ராஜெக்டில் இருந்து விலகியது போல் ஒரு செய்தி அவர் தரப்பிலிருந்து பரவியது. இதை உணர்வாளர்கள் நம்பினர். ஆனால் உண்மை என்னவென்றால், விஜய்சேதுபதி அதிலிருந்து விலகவில்லை. ‘தயாரிப்பை கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். கொதிப்பு அடங்கிய பின் ஷூட்டிங்கை வைக்கலாம்’ என்று முடிவாகியுள்ளதாம். இந்த விவகாரம் சமீபத்தில் வெளியே தெரிந்ததும் ‘இவ்வளவுதானா விஜய்சேதுபதி. ச்சை’ என்று கழுவி ஊற்றினர்  அவரை கொண்டாடிய இளைஞர்கள். 

இந்த நிலையில்தான் ‘மண்டி’ எனும் ஆன்லைன் வணிகத்துக்கான ‘ஆப்’ ஒன்றின் விளம்பரத்தில் நடித்துள்ளார் விஜய்சேதுபதி. ’சில்லரை வர்த்தக கடைகள் வைத்துப் பிழைப்போரின் வாழ்வாதாரத்தை சீர்கெடுக்கும்  ஆன்லைன் வணிக விளம்பரத்தில் விஜய்ச்சேதுபதி நடித்தது மிக கொடுமையான செயல். உடனே அவர் இந்த விளம்பரத்தை நிறுத்த சொல்ல வேண்டும். அவரை மக்கள் செல்வன்! என்கிறார்கள் ரசிகர்கள். இல்லை அவர் மக்கள் விரோதி! ஆகிக் கொண்டிருக்கிறார்.’ என்று குமுறியபடி அவரது வீட்டை முற்றுகையிடுவது, கண்டன அறிக்கைவிடுவது, இணையதளத்தில் கொதித்துக் கொட்டுவது என்று லட்சக்கணக்கான வணிகர்கள்  துடிக்கின்றனர். 

’மண்டி’ விளம்பரத்தில் நடித்தால் பெருவாரி நடுத்தர மற்றும் ஏழை வணிகர்களின் விரோதத்தை சம்பாதிப்போம் என்று தெரிந்தேதான் விஜய்சேதுபதி அதில் நடித்துள்ளார். ஈமு கோழி விளம்பரத்தில் பல லட்சங்களை வாங்கிக் கொண்டு நடித்த சத்யராஜ், சரத்குமார் போன்றோர் அதில் முதலீடு செய்த மக்கள் ஏமாற்றப்பட்டபோது வாயை மூடிக்கொண்டு தங்கள் வேலையை பார்க்க சென்றார்களே! அதே கதையைதான் விஜய் சேதுபதியும் செய்ய துவங்கியுள்ளார். 

யதார்த்த நாயகன் விஜய் சேதுபதி, வெகுஜன மக்களை விட்டு நகர்ந்து வெகு நாட்களாயாச்சு! என்று விமர்சகர்கள் போட்டுப் பொளக்கின்றனர். 
ஆனால் விஜய்சேதுபதியின் தரப்போ ”அண்ணனின் வளர்ச்சியை தாங்க முடியாத சில ஹீரோக்கள் தரப்புதான் இப்படியெல்லாம் அவர் பற்றி வதந்தி பரப்புகிறது. முத்தையா முரளீதரனின் பயோபிக் விவகாரமாகட்டும், மண்டி விளம்பரமாகட்டும் எல்லாமே இப்படித்தான் ட்விஸ்ட் செய்யப்பட்டுள்ளது. உண்மையில் இந்த ‘மண்டி’ சிஸ்டம் சில்லரை வணிகர்களுக்கு நல்லது செய்யக்கூடியது.” என்கிறார்கள். எப்பா தர்மதுர இப்படி பண்ணுறீயே! மக்க கலங்குறாகப்பா!

click me!