Vijay Interview : முதலில் நெல்சன் கேட்டபோது ஸ்டாக் இல்லப்பா என கிண்டலடித்த விஜய், பின்னர் புல்லாங்குழலையும் கால்பந்தையும் ஒப்பிட்டு ஒரு குட்டி ஸ்டோரி ஒன்றை சொன்னார்.
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற புதன்கிழமை (ஏப்ரல் 13) திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. வழக்கமாக நடிகர் விஜய் படம் ரிலீசாகும் சமயத்தில் அப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடத்தப்படும். ஆனால் தற்போது வெளியாக உள்ள பீஸ்ட் படத்துக்கு இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை.
கொரோனா அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சை கேட்கவும், அதில் அவர் சொல்லும் குட்டி ஸ்டோரியை கேட்கவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பர். ஆனால் இந்த முறை இசை வெளியீட்டு விழா நடக்காததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆனால் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் நடிகர் விஜய். இயக்குனர் நெல்சன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தன்னைப் பற்றியும், பீஸ்ட் படத்தைப் பற்றியும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக இதில் குட்டி ஸ்டோரியும் சொன்னார்.
குட்டி ஸ்டோரி
முதலில் நெல்சன் கேட்டபோது ஸ்டாக் இல்லப்பா என கிண்டலடித்த விஜய், பின்னர் புல்லாங்குழலையும் கால்பந்தையும் ஒப்பிட்டு ஒரு குட்டி ஸ்டோரி ஒன்றை சொன்னார். “புல்லாங்குழலை பார்த்து கால்பந்து கேட்டதாம், உனக்குள்ளையும் காத்துதான் இருக்கு, எனக்குள்ளையும் காத்துதான் இருக்கு. ஆனா உன்னை வாயில் வைத்து முத்தமிடுகின்றனர், என்னை காலில் போட்டு மிதிக்கின்றனர் என்றதாம்.
அதற்கு பதிலளித்த புல்லாங்குழல், நீ உனக்குள் இருக்கும் காற்றை யாருக்கும் தருவதில்லை. ஆனால் நான் எனக்குள் இருக்கும் காற்றை இன்னிசையாக மக்களுக்கு தருகிறேன். அதனால் தான் என்னை அனைவரும் முத்தமிடுகின்றனர் எனச் சொன்னதாம். ஆகையால் நாம் கால்பந்தைப் போல் இல்லாமல் புல்லாங்குழலாக இருந்து அனைவருக்கும் உதவ வேண்டும் எனக் கூறினார் விஜய். இதைக் கேட்ட ரசிகர்கள் குட்டி ஸ்டோரி வேற லெவலில் இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... vijay interview : "தளபதி டூ தலைவன்..!" அரசியல் எண்ட்ரியை உறுதிப்படுத்திய விஜய்..!