Surya jyothika Viral Video : நடிகர் சூர்யா, தற்போது தனது மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் ஜாலியாக வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. அண்மையில் வெளியான விக்ரம் படத்தில் இவர் நடித்திருந்த ரோலெக்ஸ் கதாபாத்திரம் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றதோடு, இப்படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது. இதனையடுத்து பாலா இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் சூர்யா.
இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் கடந்த ஏப்ரல் மாதம் முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட ஷூட்டிங்கை ஜூலை மாதம் கோவாவில் தொடங்க உள்ளனர். இதனால் தற்போது கிடைத்துள்ள ஓய்வு நேரத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார் சூர்யா. மத்திய அமெரிக்காவில் உள்ள கோஸ்டாரிகாவிற்கு மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் சென்றுள்ளார் சூர்யா.
அங்குள்ள சுற்றுலா தளங்களை ஜோடியாக குடும்பத்துடன் சுற்றிப்பார்த்த சூர்யா, மனைவி மற்றும் மகளுடன் காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொண்டதோடு, அங்கு பல்வேறு சாகச விளையாட்டுகளையும் விளையாடி உள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒன்றாக தொகுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஜோதிகா. அந்த பதிவில் Pura vida என்கிற வார்த்தையையும் குறிப்பிட்டுள்ளார்.
Pura vida என்றால் ஸ்பேனிஷ் மொழியில் புனிதமான வாழ்க்கை என்று அர்த்தம். மேலும் தான் பதிவிட்டுள்ள இந்த வீடியோவை தனது மகள் தியா தான் எடிட் செய்ததாக ஜோதிகா குறிப்பிட்டுள்ளார். சூர்யாவின் மகள் தியா தற்போது 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இவர் 95 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... கணிதத்தில் நூறு.. படிப்பில் சூர்யா மகள் படுஜோரு- தியாவின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் எவ்வளவு தெரியுமா