திமுக தொண்டனாகவே வாழ்ந்த பசுபதி...! கருணாநிதி படம் பார்த்திருந்தால் கதறி அழுது இருப்பார்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 24, 2021, 5:39 PM IST
Highlights

சார்பட்டா பரம்பரை படத்தில் இந்த காட்சிகளை மட்டும் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி திரையில் பார்த்திருந்தால்  நிச்சயம் கண் கலங்கி அழுது இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’ இரு தினங்களுக்கு முன்பு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் மூலமாக ஆர்யாவின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

படத்தில் டாடியாக வரும் ஜான் விஜய், பாக்கியமாக வரும் அனுபமா குமார், மாரியம்மாவாக வரும் துஷாரா விஜயன், டான்சிங் ரோஸாக வரும் சபீர் கல்லரகள், வேம்புலியாக வரும் ஜான் கொக்கேன் ஆகியோர் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். குறிப்பாக ஆர்யாவிற்கு அடுத்தபடியாக ரங்கன் வாத்தியாராக வரும் பசுபதி கதாபாத்திரம் “சார்பட்டா பரம்பரை” படத்திற்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது. 

படத்தில் திமுக தொண்டராக வரும் பசுபதி அந்த கதாபாத்திரமாகவே வாழ்த்திருக்கிறார் என பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 1960 மற்றும் 70களில் ஒரு திமுகக்காரர் எப்படி இருப்பாரோ அதேபோல் நடை, உடை, பாவனையோடு உயிரோட்டம் உள்ள கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் பா.ரஞ்சித். குறிப்பாக பசுபதி அந்த கறுப்பு சிவப்பு துண்டை தோளில் அணிந்த படி மிடுக்காக வலம் வருவதும், வடசென்னை மக்கள் நெருக்கமான இடங்களில் வசித்து வந்தாலும், தங்களுடைய கெத்தை தனித் தன்மையோடு மெயின்டன் செய்ததையும் பக்காவாக காட்சிப்படுத்தியிருக்கிறார். 

திமுக ஆட்சி காலத்தில் வடசென்னையில் பாக்ஸர்களை யானை மேல் வைத்து ஊர்வலம் நடத்தும் அளவிற்கு பாக்ஸிங் கலாச்சாரத்தை ஆதரித்ததை பா.ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அப்போது திமுக, பாக்ஸர்களோடு நெருக்கமாக இருந்ததையும், நெருக்கடி காலத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு பாக்ஸர்கள் ரவுடியிசம், கள்ளச்சாராயம் என திசைதிருப்பப்பட்டதையும் படத்தில் தைரியமாக காட்சியப்படுத்தியுள்ளார். 


மேலும் மிசா காலத்தில் திமுக தொண்டர்கள் எப்படியெல்லாம் அவதிப்பட்டார்கள், எப்படிப்பட்ட அடக்குமுறைகளுக்கெல்லாம் ஆளானார்கள் என்பதை இயக்குநர் பா.ரஞ்சித் இந்த படத்தில் தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். நெருக்கடி காலத்தில் ஓடி மறைந்து கொள்வது முதல் ஜெயிலுக்கு சென்று அவதிப்பட்டது வரை திமுகவினரின் இன்னல்களை படமாக்கியுள்ளார். ‘நான் கழகத்தின் உடன்பிறப்பு யாருக்கும் பயப்படமாட்டேன்’ என பசுபதி பேசும் வசனங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. 

இந்த காட்சிகளை மட்டும் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி திரையில் பார்த்திருந்தால் என்றால் நிச்சயம் கண் கலங்கி அழுது இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நெருக்கடி காலத்தில் திமுக சந்தித்த அடக்குமுறைகளை சில படங்களில் ஒருசில இயக்குநர்கள் மட்டுமே ஜாடைமாடையாக காட்சிப்படுத்திய நிலையில், சார்பட்டா பரம்பரை படத்தில் பா.ரஞ்சித் பல விஷயங்களை துணிச்சலாக பதிவு செய்திருப்பது தான். படத்தில் பல காட்சிகளில் நேரடியாகவே திமுக கொடி மற்றும் பெயரை பயன்படுத்தியுள்ளார். இப்படிப்பட்ட விசுவாச தொண்டர்கள் குறித்த நினைவலைகள் நிச்சயம் கருணாநிதியின் மனதை ஏதோ செய்திருக்கும் அந்த அளவிற்கு இந்த படத்தை நேர்த்தியாக வடிவமைத்து உள்ளார் பா ரஞ்சித். 

click me!