தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவலர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
தமிழ்நாடு காவல்துறை, சிறைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறைகளில் காலியாக உள்ள 3552 காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
இப்பணிகளுக்கு தகுதியானவர்கள், எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்நிலையில், தமிழக அரசு சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி, நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து தலைமைச் செயலாளர்/ பயிற்சித்துறை தலைவர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், " போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கட்டணமில்லாப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் நடைபெற்ற TNPSC Group IV எழுத்துத் தேர்வுக்கு இப்பயிற்சி மையங்களால் சிறந்த முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டதன் மூலம் 440 தேர்வர்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும் படிக்க:மத்திய அரசு வேலை.. ஆதார் துறையில் உள்ள காலிபணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு.. முழு விவரம்..
இரண்டாம் நிலைக் காவலர்,இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு மட்டும் கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளன. இப்பயிற்சி குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் இதற்கான விண்ணப்ப படிவம் ஆகியன www.civilservicecoaching.com என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் மேற்படி இணைய தளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, உரிய சான்றிதழுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 14-09-2022 வரை தேர்வர்கள் தேர்ந்தெடுக்கும் பயிற்சி மையங்களில் நேரடியாக அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:பொதுத்துறை நிறுவனத்தில் வேலை.. 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. உடனே விண்ணப்பியுங்கள்..