
மத்திய அரசு வேலையில் சேர வேண்டும் என்ற கனவோடு காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி வந்துள்ளது. இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB), 2026 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரயில்வே துறையில் குரூப்-டி (Level-1) பிரிவில் காலியாக உள்ள சுமார் 22,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இவ்வளவு பெரிய அறிவிப்பு வெளியாகியிருப்பது வேலை தேடுவோர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பப் பதிவு வரும் ஜனவரி 21, 2026 அன்று தொடங்குகிறது. விண்ணப்பிக்கக் கடைசித் தேதி பிப்ரவரி 20, 2026 (இரவு 11:59 மணி வரை) ஆகும். கடைசி நேரம் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே விண்ணப்பிப்பது சிறந்தது. ஆர்வமுள்ளவர்கள் www.rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு Level-1 பதவிகளுக்கான ஆரம்ப ஊதியமாக ரூ. 18,000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் இதர படிகளும் கிடைக்கும்.
• வயது வரம்பு: 01.01.2026 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 33 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். (வயது வரம்பு தளர்வு மற்றும் விரிவான கல்வித்தகுதி குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் முழு அறிவிப்பில் தெரிவிக்கப்படும்).
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என RRB அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, உங்கள் 'ஆதார்' (Aadhaar) விவரங்களை உள்ளிடும்போது, அது உங்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதியோடு சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க, உங்கள் ஆதார் பயோமெட்ரிக் மற்றும் சமீபத்திய புகைப்படத்தைப் புதுப்பித்து வைத்திருப்பது அவசியம்.
"ரயில்வேயில் வேலை வாங்கித் தருகிறோம்" என்று கூறி ஏமாற்றும் இடைத்தரகர்கள் மற்றும் மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. ரயில்வே தேர்வுகள் அனைத்தும் கணினி வழித் தேர்வு (CBT) மூலமாகவும், முழுக்க முழுக்கத் தகுதியின் அடிப்படையிலுமே நடைபெறும். லஞ்சம் கொடுத்து வேலையைப் பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்குச் சென்னை மண்டல இணையதளளமான www.rrbchennai.gov.in-ஐப் பார்வையிடலாம்.