
ஆசிரியர் பணி என்பது அறப்பணி மட்டுமல்ல, அது தகுதியின் அடிப்படையிலும் இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET - Teachers Eligibility Test) நடத்தப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பணியில் சேர இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். ஆனால், ஏற்கனவே பணியில் இருக்கும் சில குறிப்பிட்ட பிரிவு ஆசிரியர்களுக்கு இதில் சிக்கல்கள் நீடித்து வந்தன. இந்நிலையில், தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்குப் பெரிய நிம்மதியை அளித்துள்ளது.
முன்னதாக, தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அல்லது பதவி உயர்வு பெற டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது. ஓய்வு பெற 5 ஆண்டுகளுக்குக் குறைவாக உள்ளவர்களுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டது. மற்றவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் பணியிலிருந்து விலக வேண்டும் அல்லது கட்டாய ஓய்வு பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. அதேசமயம், சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் இந்தத் தேர்வு கட்டாயமா என்பது குறித்து ஆய்வு செய்யவும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களுக்கு நிம்மதி பெருமூச்சு
இந்தச் சூழலில் தான் தமிழக அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் (Government-aided Minority Schools) பணிபுரியும் 470 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நீண்ட நாட்களாக வேலை உறுதி செய்யப்படாமல் தவித்த ஆசிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இது தொடர்பாகப் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் சில முக்கிய விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
• உச்ச நீதிமன்றத்தின் ஆணை மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் சட்டக் கருத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
• 13.12.2023 ஆம் தேதிக்கு முன்னதாக, அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இது பொருந்தும்.
• இவர்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் இதர விவரங்களின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்ட பிறகு, இவர்களுக்கான பணி நியமன ஒப்புதல் (Approval) வழங்கப்படும்.
இந்த புதிய அரசாணையின் மூலம் மொத்தம் 470 ஆசிரியர்கள் பயனடைய உள்ளனர்.
1. சிறுபான்மைப் பள்ளிகளைச் சேர்ந்த 316 பட்டதாரி ஆசிரியர்கள்.
2. தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 154 ஆசிரியர்கள்.
ஆக மொத்தம் 470 பேருக்கு டெட் தேர்ச்சி இல்லாமலேயே பணி நியமன ஒப்புதல் கிடைக்கவுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.