
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), வரும் மார்ச் 3, 2026 அன்று நடைபெறவிருந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காக (Administrative reasons) இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வாரியம் தெரிவித்துள்ளது. இந்த தேதி மாற்றம் ஒரு குறிப்பிட்ட நாளில் நடைபெறும் தேர்வுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மற்ற தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் சிபிஎஸ்இ தெளிவுபடுத்தியுள்ளது.
மார்ச் 3-ம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகளுக்குப் பதிலாக புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன:
• 10-ம் வகுப்பு: மார்ச் 3, 2026 அன்று நடக்கவிருந்த தேர்வுகள் இப்போது மார்ச் 11, 2026 அன்று நடைபெறும்.
• 12-ம் வகுப்பு: மார்ச் 3, 2026 அன்று நடக்கவிருந்த தேர்வுகள் இப்போது ஏப்ரல் 10, 2026 அன்று நடைபெறும்.
இந்தத் தேதி மாற்றம் குறிப்பிட்ட சில பாடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
• 10-ம் வகுப்பு பாடங்கள்: திபெத்தியன் (Tibetan), ஜெர்மன், என்சிசி (National Cadet Corps), போடி (Bhoti), லிம்பூ, லெப்சா மற்றும் கர்நாடக இசை (Vocal) ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் மாற்றப்பட்டுள்ளன.
• 12-ம் வகுப்பு பாடம்: 'லீகல் ஸ்டடீஸ்' (Legal Studies) பாடத்திற்கான தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ வாரியம் 12-ம் வகுப்புத் தேர்வை ஒத்திவைத்ததற்கான குறிப்பிட்ட காரணம் எதையும் தனித்தனியாகத் தெரிவிக்கவில்லை.
இந்தத் தேதி மாற்றம் குறித்து பள்ளிகள் மற்றும் மாணவர்கள் கவனத்தில் கொள்ளுமாறு சிபிஎஸ்இ கேட்டுக்கொண்டுள்ளது. மாணவர்கள் அதிகாரப்பூர்வ சிபிஎஸ்இ இணையதளத்தை அவ்வப்போது பார்வையிடுமாறும், புதிய தேதிகளைக் குறித்துத் தெளிவாகத் தெரிந்து கொண்டு தேர்வுக்குத் தயாராகுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மற்ற அனைத்துத் தேர்வுகளும் ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணைப்படியே நடைபெறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.