
தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் UGC NET டிசம்பர் 2025 தேர்வுகள் நாளை (டிசம்பர் 31, 2025) முதல் தொடங்குகின்றன. கணினி வழித் தேர்வாக (CBT) நடைபெறும் இந்தத் தேர்வுகள் ஜனவரி 7, 2026 வரை நடைபெறும். உதவிப் பேராசிரியர் மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோஷிப் (JRF) தகுதிக்கான இந்தத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது லட்சக்கணக்கான தேர்வர்களின் கனவாக உள்ளது.
இந்தத் தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டது. இரண்டுமே அப்ஜெக்டிவ் டைப் (Objective Type) கேள்விகளைக் கொண்டவை.
• பிரிவு 1: இது தேர்வரின் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சித் திறனை (Teaching/Research Aptitude) சோதிக்கும் வகையிலானது. இதில் 50 கேள்விகள் கேட்கப்படும், மொத்தம் 100 மதிப்பெண்கள்.
• பிரிவு 2: இது தேர்வர் தேர்ந்தெடுத்த பாடப்பிரிவு (Subject Domain) சார்ந்தது. இதில் 100 கேள்விகள் கேட்கப்படும், மொத்தம் 200 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரம் முன்னதாகவே தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்று NTA அறிவுறுத்தியுள்ளது. உடல் சோதனைகள் (Frisking) மற்றும் பதிவு நடைமுறைகளை முடிப்பதற்கு இந்த நேரம் அவசியம். தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே ரெஜிஸ்ட்ரேஷன் டெஸ்க் மூடப்படும் என்பதால், தாமதமாக வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
NTA இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அட்மிட் கார்டை (Admit Card) தேர்வர்கள் கண்டிப்பாகக் கொண்டு வர வேண்டும். அட்மிட் கார்டு இல்லாத தேர்வர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு மையத்தில் உள்ள அதிகாரிகள் எப்போது கேட்டாலும் அடையாளச் சான்று மற்றும் அட்மிட் கார்டைக் காண்பிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு தேர்வருக்கும் ரோல் நம்பர் அடிப்படையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கும். தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் மட்டுமே அமர வேண்டும். தாங்களாகவே வேறு அறைக்கோ அல்லது வேறு இருக்கைக்கோ மாறினால், அவர்களது தேர்வுத் தகுதி (Candidature) ரத்து செய்யப்படும். இது குறித்து எந்தப் புகாரும் ஏற்றுக்கொள்ளப்படாது.
தேர்வு அறையில் உள்ள கணினியில் தோன்றும் வினாத்தாள், நீங்கள் தேர்ந்தெடுத்த பாடப்பிரிவு தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதில் ஏதேனும் மாற்றம் இருந்தால் உடனே அறை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும். அதேபோல், தேர்வு நேரத்தில் கணினியில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு, அவசர மருத்துவ உதவி அல்லது வேறு தகவல் தேவைப்பட்டால் உடனடியாக கண்காணிப்பாளரை அணுகலாம். டிராஃபிக் ஜாம், பேருந்து தாமதம் போன்ற காரணங்களைக் கூறி தாமதமாக வருவதை ஏற்க முடியாது என்றும் NTA எச்சரித்துள்ளது.