பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் பணி குறித்த தேர்வுகளின் உத்தேச பட்டியல்… வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்!!

By Narendran S  |  First Published Dec 28, 2022, 9:32 PM IST

2023 ஆம் ஆண்டுக்கான கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பணி குறித்த தேர்வுகளின் உத்தேச பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 


2023 ஆம் ஆண்டுக்கான பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் பணி குறித்த தேர்வுகளின் உத்தேச பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு 4,000 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாக உள்ளது. உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கான தேர்வு 2023 ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது.  வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு 23 காலிப்பணிடங்கள் உள்ளன. இவர்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாக உள்ளது. வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்துக்கான தேர்வு 2023 மே மாதத்தில் நடைபெற உள்ளது. அதேபோல தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் உருது ஆகிய பாடங்களுக்கான இடைநிலை ஆசிரியர்களுக்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: சர்வதேச புத்தகக் கண்காட்சி முதல் எழுத்தாளர்களுக்கு வீடு வரை.. தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றிய முதல்வர் ஸ்டாலின்

Tap to resize

Latest Videos

அதில், 6,304 பணியிடங்கள் - தமிழ் ஆசிரியர்கள், 133 பணியிடங்கள் - தெலுங்கு ஆசிரியர்கள், 3 பணியிடங்கள் - கன்னட ஆசிரியர்கள், 113 பணியிடங்கள் - உருது ஆசிரியர்கள் என மொத்தம் 6,553 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளது. அதேபோல் 3,587 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளது. அவர்களுக்கான தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளன. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளதை அடுத்து 493 பணியிடங்களுக்கான அறிவிப்பு, 2023 மே மாதத்தில் வெளியாக உள்ளதாகவும் தேர்வு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை... காவல்துறை அதிரடி உத்தரவு!!

அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு, ஜூன் மாதத்தில் வெளியாக உள்ளது. 97 பணி இடங்களுக்கான தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. சட்டக் கல்லூரிகளில் 129 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூலை மாதத்திலும் தேர்வு அக்டோபர் மாதத்திலும் நடக்க உள்ளது. 267 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2-க்கான அறிவிப்பு 2023 டிசம்பர் மாதத்தில் வெளியாக உள்ளது. 2024 மார்ச் மாதத்தில் தேர்வு நடைபெற உள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த 15,149 இடங்கள் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!