குடிமை பணி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையம்.
அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திலுள்ள இளைஞர்கள் குடிமைப் பணி தேர்வில் வெற்றிபெற்று மைய, மாநில அரசுகளின் உயர் பதவிகளில் பணியமர்யமர்த்தப்பட வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு உருவானது அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம்.
ஓசையின்றி இதயத்தைப் போல செயல்பட்டுவரும் இந்த அமைப்பின் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதுவரை வெற்றி பெற்று இந்திய அளவில் செம்மையாகப் பணியாற்றி வருகின்றார்கள். இந்த மையம் கடந்த ஐம்பத்து நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளாகச் சென்னையில் பசுமை வழிச் சாலையில் தனி வளாகத்தில் இயங்கிக்கொண்டு வருகிறது. ஆர்வலர்கள் தங்குவதற்கு அறைகளும், கட்டணமின்றி உணவும் அளிக்கப்பட்டு வருகிறது. இருபத்தி ஐந்தாயிரம் நூல்கள் கொண்ட நூலகம் ஒன்றும் இந்த வளாகத்தில் அமைந்துள்ளது.
undefined
மத்திய தேர்வாணையம் செப்டம்பர் 2022-ல் நடத்திய முதன்மைத் தேர்வுகளின் இறுதி முடிவு 06.12.2022 அன்று வெளியிடப்பட்டது. இப்பயிற்சி மையத்தில் தங்கிப் பயின்ற 18 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள், இவர்கள் புது டில்லியில் ஆளுமைத் தேர்வை எதிர்கொள்ள உள்ளார்கள். முதன்மைத் தேர்விலும் ஆளுமைத் தேர்விலும் பெறும் மொத்த மதிப்பெண்களை கணக்கிட்டு வெற்றி வரிசை தீர்மானிக்கப்பட உள்ளது.
இம்மையத்தில் பயின்று வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமல்லாமல், முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து தேர்வர்களுக்கும் மாதிரி ஆளுமைத் தேர்வை இம்மையம் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. இம் மாதிரி ஆளுமைத் தேர்வு அவர்களுக்கு மிகப் பெரிய பயிற்சியாக இருப்பதோடு தங்கள் செயல்பாட்டை இன்னும் எவ்வாறு மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற தெளிவையும் தருகிறது. அதனால் பல தேர்வர்கள் இதில் கலந்துகொண்டு அறிவுரைகளைப் பெற்று பயன் அடைந்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க..அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளா..? பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக்கல்வித்துறை
இம்முறையும் முதன்மைத் தேர்வில் தகுதி பெற்ற அனைத்துத் தேர்வர்களுக்கும் மாதிரி ஆளுமைத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இம்மாதிரி ஆளுமைத் தேர்வு 02.01.2023 திங்கட்கிழமை அன்றும் 03.01.2023 செவ்வாய்கிழமை அன்றும் இரு நாட்கள் நடத்தப்பட உள்ளது. காலை 10.00 மணிக்கு இத்தேர்வு தொடங்கிவிடும். முதல் நாள் காலை ஆளுமைத் தேர்வு குறித்தும் அதில் தேவைப்படுகிற திறன்கள் குறித்தும், தேர்வர்களுக்கு எடுத்துக் கூறப்படுவதுடன் அவர்களுடைய சந்தேகங்களுக்கும் விடையளிக்கப்படும். பின்னர் அவர்கள் தேர்வில் கலந்துகொள்வார்கள்.
இம்மாதிரித் தேர்வை ஆறு குழுக்கள் நடத்த உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தலைமைச் செயலாளர் நிலையில் பணிபுரிகிறவர்கள், மாவட்ட ஆட்சியர்களாக பணியாற்றியவர்கள், குடிமைப்பணித் தேர்விற்கு பயிற்சி அளிக்கிற பேராசிரியர்கள், தேர்வர்களின் உடல் மொழி, விடையளிக்கும் முறை, தகவல் பரிமாற்ற திறன் போன்றவற்றைத் துல்லியமாக பரிசீலனை செய்கிற உளவியல் நிபுனர்கள் ஆகியோர் இடம் பெறுவார்கள்.
ஆளுமைத் தேர்வில் இவர்களுடைய ஆளுமைத் தோற்றம், முன்னெடுக்கும் பண்பு, தலைமைப் பண்பு, தனித் திறன், தன்னம்பிக்கை, அறிவாற்றல், தகவல் பரிமாற்றம், உடல் மொழி, அறநெறி, ஊக்கத்திறன் போன்ற பத்து பண்புகள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு நூறு சதவிதத்திற்கு மதிப்பெண்கள் அளிக்கப்படும். பின்னர், தேர்வர்களிடம் அவர்கள் செயல்பட்ட விதம் குறித்து எடுத்துக் கூறி எவ்வாறு தங்களை இன்னும் செம்மையாக செதுக்கிக்கொள்ள வேண்டும் என்கிற அறிவுரையும் வழங்கப்படும்.
தேர்வர்கள் மாதிரி ஆளுமைத் தேர்வில் எவ்வாறு விடையளித்தார்கள் என்பதை அவர்களே கண்டால்தான் தங்கள் குறைபாடுகளை நீக்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும். எனவே, அவர்கள் ஆளுமைத் தேர்வில் கலந்துகொள்ளும்போதே காணொலிக்கருவி மூலம் அவர்கள் செயல்பாட்டை பதிவு செய்து, தேர்வு முடிந்த கையோடு அவர்களின் PEN DRIVE-ல் பதிவு செய்து வழங்கப்படும். அதனை பயன்படுத்தி அவர்கள் தங்கள் தகவல் பரிமாற்றம், உடல்மொழி, மொழியில் சரளத்தன்மை போன்றவற்றை உண்மையான ஆளுமைத் தேர்விற்கு முன்பு விருத்தி செய்துகொள்ள முடியும்.
மாதிரி ஆளுமைத் தேர்வுக்கு வருகிறவர்களுக்கு அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் மதிய உணவு வழங்கப்படும். அவர்களுடைய செயல்பாடு குறித்த அறிக்கையின் நகலும் வழங்கப்படும். ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்வதற்கு ஊக்கத்தொகையாக ரூ.5000/- வழங்கப்படும். இது தொடர்பான விவரங்களை www.civilservicecoaching.com என்ற இணைய தளத்தில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, முதன்மைத் தேர்வு வெற்றியாளர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பப் படிவத்தை (சுயவிவரக் குறிப்புடன் DAF-I and DAF-II) பயிற்சி மைய முதல்வருக்கு aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ 29.12.2022-க்குள் அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இதையும் படிங்க..சொன்ன நம்பமாட்டீங்க.. தமிழ்நாடு மகளிர் மேம்பாடு கழகத்தில் தெறிக்கவிடும் வேலைவாய்ப்புகள்..!