அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில், இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடைபெறும் மாதிரி ஆளுமைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில், இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடைபெறும் மாதிரி ஆளுமைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் “தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள, சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, ஏழை, எளிய ஆர்வலர்களுக்கு பயனளிக்கும் வகையில், இப்பயிற்சி மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மேலும், இப்பயிற்சி மையத்தில் செப்டம்பர் 26 முதல் நவம்பர் 28 வரை மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இந்திய வனப்பணி முதன்மைத் தேர்விற்காக 9 ஆர்வலர்கள் தங்கி பயின்றார்கள். அவர்களில் 5 ஆர்வலர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 3 ஆர்வலர்கள் மகளிர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த ஆர்வலர்களுக்கு இப்பயிற்சி மையத்தின் மூலம் மாதிரி ஆளுமைத் தேர்வு, பணியில் உள்ள, ஓய்வு பெற்ற அகில இந்திய குடிமைப் பணி அலுவலர்களாலும், தலை சிறந்த வல்லுநர்களாலும் நடத்தப்பட உள்ளது. இது, தேர்ச்சி பெற்றுள்ள ஆர்வலர்கள், தங்களது மாதிரி ஆளுமைத் தேர்வை மிகச் சிறப்பான முறையில் எதிர்கொள்ள ஏதுவாக அமையும்.
இப்பயிற்சி மையத்தின் மூலம் தேர்ச்சி பெற்றுள்ள ஆர்வலர்கள் தவிர, மேற்குறித்த வனப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த பிற ஆர்வலர்களும், இப்பயிற்சி மையத்தில் 02.01.2023 மற்றும் 03.01.2023 அன்று நடைபெறவுள்ள மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கு பெறலாம். அவ்வாறு பங்கு பெற விரும்பும் ஆர்வலர்கள், தங்களது விருப்பத்தினை, (DAF-I மற்றும் DAF-II) aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 30.12.2022-க்குள் அனுப்பலாம்.
இது தொடர்பான விவரங்களை www.civilserviceindia.com என்ற இணைய தளத்தில் காணலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.