
இந்தியாவில் செயல்படும் அனைத்து வங்கிகளும் தங்களது இணையதள முகவரியை '.bank.in' என்ற புதிய மற்றும் பிரத்யேக டொமைனுக்கு மாற்றியமைத்துள்ளன. இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஏற்கனவே வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் அதிகரித்து வரும் மோசடிகளைத் தடுக்கவும், வாடிக்கையாளர்களின் நிதித் தரவுகளுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அறிவுறுத்தலின் பேரில், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நாட்டின் முன்னணி வங்கிகள் அனைத்தும் தற்போது புதிய டொமைனுக்கு மாறியுள்ளன. பாரத ஸ்டேட் வங்கி (SBI), பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank), ஹெச்.டி.எப்.சி வங்கி (HDFC Bank), ஆக்சிஸ் வங்கி (Axis Bank), பாங்க் ஆப் பரோடா (Bank of Baroda) உட்பட அனைத்து வங்கிகளும் இந்த மாற்றத்தைச் செய்துள்ளன.
எடுத்துக்காட்டாக: பாரத ஸ்டேட் வங்கியின் புதிய அதிகாரப்பூர்வ இணையதள முகவரி: https://sbi.bank.in
இந்த டொமைன் மாற்றம் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
'.bank.in' டொமைன் என்பது அரசு அனுமதியுடன் வழங்கப்படும் மிக பாதுகாப்பான டொமைன் ஆகும். இது, வாடிக்கையாளர்களை பிஷிங் (Phishing) மற்றும் போலி வலைதளங்கள் போன்ற ஆன்லைன் மோசடிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மிகவும் உதவும்.
இந்த மாற்றத்தால், வாடிக்கையாளர்கள் ஒரு வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தை எளிதில் அடையாளம் காண முடியும். 'www.abc.com' போன்ற பொதுவான முகவரிக்குப் பதிலாக 'www.abc.bank.in' என்பதைப் பார்க்கும்போது, அது நமது வங்கிதான் என்ற பாதுகாப்பு உணர்வும் நம்பிக்கையும் மக்களிடையே உருவாகும்.
இந்தக் கட்டுப்பாடான டொமைன் மூலம் போலியான வலைதளங்களை உருவாக்குவது மிகவும் கடினம். இதனால் வாடிக்கையாளர்கள் போலியான வலைதளங்களை எளிதில் அடையாளம் காண முடியும். இது இணைய மோசடிகளைத் தடுப்பதற்கான ஒரு முக்கியமான முயற்சியாகும்.
வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும், இனிமேல் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தும்போது, இணையதள முகவரியில் கட்டாயம் '.bank.in' என்று உள்ளதா என்பதை உறுதி செய்துகொண்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.