பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏழை மற்றும் நடுத்தர மகக்ளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தொழில் தொடங்க விரும்புவோருக்கு நிதியதவி அளிக்கும் வகையில் தொடங்கப்பட்ட திட்டம் தான் பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம். இந்த திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம்
இந்த திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். சாமானிய மக்களையும் தொழில் முனைவோராக மாற்றும் வகையிலும், சிறு வணிகர்களுக்கு உதவும் நோக்கத்துடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 3 வகைகளில் கடன்கள் வழங்கப்படுகிறது.
அதன்படி சிஷு என்ற வகையில் ரூ.50,000 வரையிலும், கிஷோர் என்ற வகையின் கீழ் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் என்ற வகையின் கீழ் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடன்களை பெற்ற பிறகு 3 அல்லது 5 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
பொதுவாக எந்த உத்தரவாதமும் இன்றி கடன்கள் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் இந்த திட்டத்தில் எந்த உத்தரவாதமும் தேவையில்லை. பொதுவான தகவல்களை ஆவணங்களுடன் இணைத்து கொடுத்தால் போதும். உங்கள் தொழில் தொடர்பான திட்ட அறிக்கை மற்றும் எதிர்கால வருமான கணிப்புகள் ஆகிய விவரங்களை வங்கிகள் கேட்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களும் முத்ரா கடன்களை வழங்குகின்றன. இந்த வங்கிகளில் முத்ரா கடனுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். கடன் வாங்க விரும்புவோர் அந்த விண்ணப்பங்களை பெற்று அடையாள சான்று, இருப்பிட சான்று, இயந்திரங்கள் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான சான்று, புகைப்படம், தொழிற்சாலை இருக்கும் போன்ற விவரங்களை சேர்த்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தர வேண்டும். உங்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து ஒரு மாதத்திற்குள் வங்கிகள் கடன் வழங்கும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ஆன்லைனிலும் முத்ரா கடனுக்கு விண்ணப்பிக்கலாம். Mudra.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்கள் தொடங்கி அதன் பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். விவசாயம் செய்வோருக்கு இந்த கடனுதவி கிடைக்காது. புதிய தொழில் தொடங்க விரும்புவோர் உதாரணமாக உற்பத்தி, வர்த்தக்ம், சேவைகள், கோழிப்பண்ணை, பால் பண்ணை தேனீ வளர்ப்பு போன்ற தொழில்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின் படி கடன் வழங்கும் நிறுவனங்கள் வட்டியை நிர்ணயித்து கொள்கின்றன.
2023 ஏப்ரல் மாத நிலவரத்தின் படி தமிழ்நாட்டில் மட்டும் 4,03, 63,219 முத்ரா கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் மட்டும் 17.8 லட்சத்திற்கும் மேற்பட்ட கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து திருச்சியில் 17.1 லட்சத்திற்கும் மேற்பட்ட கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் 16.6 லட்சத்திற்கும் மேற்பட்ட கடன்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பித்தக்கது.