unemployment: unemployment india: ஜூன் மாதத்தில் வேலையின்மை 7.8% அதிகரிப்பு: 1.30 கோடி பேருக்கு வேலை காலி

By Pothy RajFirst Published Jul 6, 2022, 2:05 PM IST
Highlights

ஜூன் மாதத்தில் நாட்டில் வேலையின்மை வீதம் 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 1.30 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். இதில் பெரும்பாலும் வேளாண் தொழிலாளர்கள்தான் என்று இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் மாதத்தில் நாட்டில் வேலையின்மை வீதம் 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 1.30 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். இதில் பெரும்பாலும் வேளாண் தொழிலாளர்கள்தான் என்று இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

வேலையின்மை அளவு கடந்த மாதத்தில் அதிகரித்தமைக்கு முக்கியக் காரணம் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு குறைந்ததுதான். கடந்த மே மாதத்தில் 6.62 சதவீதமாக இருந்த வேலையின்மை, ஜூன் மாதத்தில் 8.03 சதவீதமாக அதிகரித்தது. நகர்ப்புறங்களில் வேலையின்மை மே மாதத்தில் 7.12 சதவீதமாக இருந்தது ஜூன் மாதத்தில் 7.30 சதவீதமாக அதிகரித்தது. 

இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் இயக்குநர் மகேஷ் வியாக் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ லாக்டவுன் இல்லாத மாதத்திலும் வேலையின்மை பெரிதாக உருவாகியுள்ளது. இதற்கு பெரும்பாலும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு குறைந்ததுவிட்டதே காரணம். 

கிராமப்புறங்களில் வேளாண் பணிகள் குறைந்துவிடும்போது இதுபோன்று வேலையின்மை அதிகரிக்கும். ஆனால் விதைப்பு பருவம், அறுவடை வந்துவிட்டால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். ஜூன் மாதத்தில் மட்டும் 1.30 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். 

வேலையில்லாதோர் எண்ணிக்கை 30 லட்சம் அதிகரித்துள்ளது. பெரும்பாலும், தொழிலாளர்கள் ஒரு இடம் விட்டு ஒரு இடம் செல்லுவதாலும், அமைப்புசாரா துறையிலும்தான் இந்த வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. பருவமழை பெய்யும் காலத்தில் இதுபோன்று அதிகமான அளவில் தொழிலாளர்கள் வேலையிழப்பது கவலைக்குரியது. 

இதில் மற்றொரு கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், 25 லட்சம் பேர் ஊதியம் பெறும் பிரிவில் வேலையிழந்துள்ளனர். 
மாத ஊதியம் பெறும் பிரிவில் இருப்போரின் பாதிப்பையும் ஜூன் மாதம் அம்பலப்படுத்திவிட்டது. ஆயுதப்பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பையும் மத்திய அரசு சுருக்கியுள்ளது, தனியார் வேலைவாய்ப்பும் ஜூன் மாதத்தில் குறையத் தொடங்கியுள்ளன. பருவமழை பெய்தும், வேலையிழப்பை தடுக்க முடியாது. வேலையிழப்பைத் தடுக்கவும், புதிய வேலைவாய்ப்பை உருவாக்கவும் பொருளாதாரம் எதிர்காலத்தில் வேகமாக வளர வேண்டும்” 

இவ்வாறு மகேஷ் வியாக் தெரிவித்தார்.

கடந்த ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக ஹரியாணாவில் 30.6 சதவீதம் வேலையின்மையும், ராஜஸ்தானில் 29.8%, அசாமில் 17.20%, ஜம்மு காஷ்மீரில் 17.20%, பிஹாரில் 14% வேலையிழப்புஏற்பட்டுள்ளது.


 

click me!