
Russia ukraine crisis: உக்ரைன்- ரஷ்யா இடையே நடந்து வரும் போரால், இந்தியப் பொருளாதாரம் பல்வேறு சிக்கல்களை அடுத்துவரும் மாதங்களில் எதிர்கொள்ளும். குறிப்பாக இறக்குமதிச் செலவு 60ஆயிரம் கோடி டாலராக அதிகரித்து, நடப்பு கணக்குப் பற்றாக்குறையை அதிகப்படுத்தும்.
அதுமட்டுமல்லாமல் உள்நாட்டில் பணவீக்கத்தை அதிகப்படுத்தும் என்று இ்ந்தியா ரேட்டிங் நிறுவனம் எச்சரித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யப் போர் தீவிரமடைந்துள்ளது. இதனால் ரஷ்யா மீது பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் பொருளாதார, நிதித்தடையை விதித்துள்ளன. ரஷ்யாவிலிருந்து இறக்குமதிக்கு தடைவிதித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து பேரல் 110 டாலரை எட்டியுள்ளது.
இதனால் வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்தால், ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும் ஆட்டம் காணும். இந்தியாவில் ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ரூ.100க்கு மேல் உயர்ந்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், இன்னும் மிகப்பெரிய விலை ஏற்றத்தை மக்கள் சந்திக்க வேண்டியதிருக்கும். பெட்ரோல், டீசல் விலை உயரும்போது, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, பணவீக்கமும் அதிகரிக்கும்.
ரஷ்யா-உக்ரைன் போரால் இந்தியா எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் குறித்து இந்தியா-ரேட்டிங் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
1. ரஷ்யா-உக்ரைன் போரால் இந்தியாவின் இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்படும். குறிப்பாக கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நகைகள், விலை உயர்ந்த கற்கள், சமையல் எண்ணெய், உரங்கள், ஆகியவற்றின் இறக்குமதிச் செலவு கடுமையாக அதிகரி்க்கும்.
2. பொருட்களின் விலை ஏற்றத்தால் வரும் மாதங்களில் பணவீக்கம் கடுமையாக உயரக்கூடும்.
3. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியைச் சந்திக்கலாம்.
4. வரும் 2022-23ம் நிதியாண்டில் இந்தியாவின் இறக்குமதி செலவு 60ஆயிரம் கோடி டாலராக உயரக்கூடும். தற்போது நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் 493 கோடி டாலராகத்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அரசின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை விரிவடையச் செய்யும்
5. இறக்குமதி செலவு பணவீக்கத்தில் எதிரொலிக்கும். கச்சா எண்ணெய் விலையில் பேரலுக்கு 6 டாலர்உயர்வு என்பதால், நடப்பு கணக்குப் பற்றாக்குறையில் 6600 கோடி டாலர் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.
6. அன்னியச் செலாவனி பற்றாக்குறையால் தவிக்கும் இலங்கையாலும் இந்தியாவின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும். கடந்த 2015ம் ஆண்டு இலங்கைக்கான இந்திய ஏற்றுமதி 746 கோடி டாலராக இருந்தநிலையில், நடப்பு நிதியாண்டின் 3 காலாண்டுகளில் 442 கோடி டாலராகக் குறைந்துவிட்டது
7. 2013ம் ஆண்டு உக்ரைனுடன் வர்த்தகம் அளவு 311 கோடி டாலராக இருந்தது, இது கடந்த இரு ஆண்டுகளில் 235 டாலராகக் குறைந்துள்ளது.
8. ரஷ்யாவுடனான இந்திய வர்த்தகம் 2018முதல் 2021 வரை 800 முதல் 1100 கோடி டாலர் வரையில் இருந்தது. தற்போது 944 டாலர்வரைதான் நடப்பு நிதியாண்டில் வர்த்தகம் நடந்துள்ளது
9. உக்ரைன்-ரஷ்யப் போரால் இந்தியாவின் இறக்குமதி செலவு அதிகரித்தல், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைதல் போன்றவற்றால், பணவீக்கமும் அதிகரிக்கும். பெட்ரோலியப் பொருட்கள், சூரியகாந்தி எண்ணெயில் தலா 10% விலை உயர்வு சில்லரை மற்றும் மொத்தவிலைப் பணவீக்கத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.