Oil prices: உக்ரைன் ரஷ்யாவின் போரால் ஏற்கெனவே சர்வதேசசந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் சவுதி அரேபியாவும் விலையை உயர்த்த தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
உக்ரைன் ரஷ்யாவின் போரால் ஏற்கெனவே சர்வதேசசந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் சவுதி அரேபியாவும் விலையை உயர்த்த தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்த விலை உயர்வு ஏப்ரல் மாதத்திலிருந்து அமலுக்கு வரலாம் என சவுதி அரேபியாவில் உள்ள பல்வேறு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யப் போர் தீவிரமடைந்துள்ளது. இதனால் ரஷ்யா மீது பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் பொருளாதார, நிதித்தடையை விதித்துள்ளன. ரஷ்யாவிலிருந்து இறக்குமதிக்கு தடைவிதித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து பேரல் 110 டாலரை எட்டியுள்ளது.
இதனால் வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்தால், ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும் ஆட்டம் காணும் என உலக நாடுகள் அஞ்சுகின்றன. இதனால், பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்துவரும் வளகுடா நாடுகளான ஒபேக் நாடுகள் கூட்டமைப்பிடம் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க அமெரிக்க, ஐரோப்பிய யூனியன் நாடுகள் கேட்டுக்கொண்டன. ஆனால், தினசரி உற்பத்தியான 4 லட்சம் பேரல்களுக்கு மேல் உயர்த்த முடியாது எனத் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவருவதால், தாங்களும் விலையை உயர்த்த வேண்டிய சூழலி்ல் இருப்பதால், ஏப்ரல் மாதத்திலிருந்து சவுதி அரேபிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களும் கச்சா எண்ணெய் விலையை பேரலுக்கு5 டாலர் வரை உயர்த்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சில எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பேரல் ஒன்றுக்கு சராசரியாக 2 டாலர் வரை உயரக்கூடும் எனத் தெரிவித்துள்ளன.
அரேபியாவின் மீடியம் ரக கச்சா எண்ணெய், ஹெவி க்ரூட் ஆயில் விலையும் ஏப்ரல் மாதம் நிச்சயம் உயரும் என்று சந்தை வல்லுநர்களும் தெரிவிக்கிறார்கள்.
இந்த விலை உயர்வு செய்தியால், இந்தியாவில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனம், கூடுதலாக கச்சா எண்ணெய் சப்ளை செய்ய வேண்டும் என்று அரேபிய நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏற்கெனவே பிரன்ட், வெஸ்ட் டெக்ஸாஸ் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 108 முதல் 110 டாலராக உயர்ந்துவிட்டது. இதில் அரேபிய நிறுவனங்களும் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தினால், இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளின் பொருளாதாரத்தில் பெரியஅளவு பாதிப்பை ஏற்படுத்தும். கச்சா எண்ணெய் விலை உயர்வு சாமானியர்கள் வரை தாக்கத்தை ஏற்படுத்தும்.