டிவிஎஸ் எமரால்டு புதிய சாதனை! துவக்க நாளில் ரூ.438 கோடிக்கு வீடுகள் விற்பனை!

By Dinesh TG  |  First Published Jul 24, 2023, 12:36 PM IST

சென்னை: சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள டிவிஎஸ் எமரால்டு நிறுவனத்தின் எலிமென்ட்ஸ் குடியிருப்புகளின் விற்பனை தொடங்கியது. லாஞ்ச் டே சேல்ஸ் எனப்படும் துவக்க நாள் விற்பனையில் மட்டும் ரூ. 438 கோடிக்கு வீடுகள் விற்பனையாகி சென்னை ரியல் எஸ்டேட் துறையில் புதிய சாதனையை டிவிஎஸ் எமரால்டு படைத்துள்ளது.


சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள 200 அடி ரோடு அருகே டிவிஎஸ் குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான டிவிஎஸ் எமரால்டு நிறுவனத்தின் எலிமென்ட்ஸ் குடியிருப்புகள் உள்ளது. 6.56 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்து இருக்கும் இந்த குடியிருப்பில் இரண்டு மற்றும் மூன்று பி.எச்.கே வீடுகள் உள்ளன. 934 சதுர அடி முதல் 1,653 சதுர அடி கொண்ட வீடுகளாக பரந்து விரிந்துள்ள டிவிஎஸ் எமரால்டு குடியிருப்பில் மொத்தம் 820 வீடுகள் உள்ளது. மொத்தம் 996,000 சதுர அடியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பில் 68.99 லட்ச ரூபாயில் இருந்தே வீடுகள் கிடைக்கிறது.

எலிமென்ட்ஸ் குடியிருப்பு ஐந்து வகையான மாடிகளை கொண்டுள்ளது. குடியிருப்பின் மைய பகுதியில் 35 ஆயிரம் சதுர அடியில் மர வீடுகள், பட்டர்பிளை கார்டன், நீச்சல் குளம், அவுட்டோர் ஜிம், ஜென் கார்டன் ஆகியவையும் உள்ளன. 9 ஆயிரம் சதுர அடியில் கிளப் ஹவுஸ் உள்ளது. அதில், யோகா டெக், மல்டி பர்போஸ் ஹால், விளையாட்டு அறைகள், ஒன்றாக சேர்ந்து பணி செய்வதற்கான இடம் உள்ளிட்டவைகளும் உள்ளன.

Tap to resize

Latest Videos

டிவிஎஸ் எமரால்டு குடியிருப்பின் விற்பனை நேற்று முதல் தொடங்கியது. முதல் நாளன கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது லாஞ்ச் டே என்று சொல்லப்படும் துவக்க நாளிலேயே ரூ. 438 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. சென்னையில் ரியல் எஸ்டேட் துறையில் இது மிகப்பெரிய சாதனையாகும். கடந்த 10 ஆண்டுகளில் குடியிருப்பு வீடுகள் விற்பனையுடன் ஒப்பிட்டால் டிவிஎஸ் எமரால்டு நிறுவனம் மிகப்பெரும் சாதனை படைத்துள்ளதை அறிய முடியும்.

கடந்த மே மாதம் காசாகிராண்ட் மெஜஸ்டிகா நிறுவனத்தின் குடியிருப்புகள் முதல் நாளிலே ரூ.222.6 கோடிக்கு விற்பனையானது. கடந்த ஏப்ரல் மாதம் 195.13 கோடிக்கு பாஷ்யம் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தி பீக் விற்பனையானது. சென்னை கோவிலம்பாக்கத்தில் இருக்கும் டிவிஎஸ் எமரால்டு குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 448 வீடுகள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் சென்னை ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரும் மைல் கல் ஆகும்.

சென்னை ரியல் எஸ்டேட் சந்தையில் இதுவரை எந்த ஒரு நிறுவனமும் முதல் நாளிலோ அல்லது மாதத்திலோ ரூ. 438 கோடிக்கு விற்பனை செய்தது இல்லை என்று தரவுகள் கூறுகின்றன. இந்திய ரியல் எஸ்டேட் துறை பற்றி நைட் பிராங்க் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அதாவது ஜனவரி முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் சென்னையில் குடியிருப்பு சந்தையின் மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது மூன்று சதவிகிதம் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் சென்னையில் முதல் ஆறு மாதத்தில் 7,150 வீடுகள் விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 6,951 வீடுகளே விற்பனையாகியுள்ளது. மும்பை, பெங்களூரு, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் முறையே 8 சதவிகிதம் 2 சதவிகிதம் 1 சதவிகிதம். 3 சதவிகிதம் விற்பனை சரிந்துள்ள நேரத்தில் சென்னையில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் எமரால்டு நிறுவனத்தின் இந்த புதிய மைல் கல் குறித்து அந்த நிறுவனத்தின் இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீராம் ஐயர் கூறியதாவது:- எங்கள் நிறுவனம் விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் பிராண்ட் மீது நம்பிக்கையும் சிறப்பான சேவை அளிக்க வேண்டும் என்ற எங்கள் அர்ப்பணிப்பையும் பாராட்டிய வாடிக்கையாளர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு ஒவ்வொரு நாளும் புதுவித அனுபவங்களை கொடுக்கும் விதமான குடியிருப்புகளை மக்கள் நாடுகிறார்கள். நாங்கள் மக்களின் இந்த தேவையை தொடர்ந்து பூர்த்தி செய்து வருகிறோம். நடப்பு நிதி ஆண்டில் பெங்களூர், சென்னையில் அதிக அளவில் குடியிருப்புகளை லாஞ்ச் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்" என்றார். சென்னையில் சாதனை படைக்கும் அளவாக குடியிருப்புகள் விற்பனை நடந்தாலும் சென்னை குடியிருப்பு சந்தை இந்திய அளவில் குறைவான விற்பனை கொண்ட ஒன்றாகவே உள்ளது. நைட் பிராங்க் அறிக்கையின் படி, மும்பையில் தான் அதிக அளவு வீடுகள் விற்பனை ஆகியுள்ளது. அதாவது முதல் ஆறு மாதாத்தில் 40,798 வீடுகள் விற்பனையாகியுள்ளது.

டாப் 8 சந்தைகளில் 26 சதவிகிதம் மும்பை மட்டும் பெற்றுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் டெல்லியின் என்.சி.ஆர் பகுதியில் 30,114 வீடுகளும் பெங்களூரில் 26,247 வீடுகளும், புனேவில் 21,760 வீடுகளும் ஐதராபாத்தில் 15,355 வீடுகளும் அகமதாபாத்தில் 7,982 வீடுகளும் விற்பனையாகியுள்ளது. கொல்கத்தா மட்டுமே சென்னையை விட பின் தங்கியுள்ளது. கொல்கத்தாவில் 7,324 வீடுகள் விற்பனையாகியுள்ளது.
 

click me!