Tork Kratos price : அசத்தல் அம்சங்களுடன் டார்க் கிராடோஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

By Kevin KaarkiFirst Published Jan 26, 2022, 3:11 PM IST
Highlights

டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் கிராடோஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. 

பூனேவை சேர்ந்த டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் கிராடோஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய டார்க் கிராடோஸ் மாடல் விலை ரூ. 1.08 லட்சம் என துவங்குகிறது. இதே மோட்டார்சைக்கிளின் சக்திவாய்ந்த வேரியண்ட் கிராடோஸ் ஆர் என அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 1.23 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

டார்க் கிராடோஸ் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 999 ஆகும். இந்த மாடலின் வினியோகம் ஏப்ரல் மாத வாக்கில் துவங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் கடந்த ஆறு ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வந்தது.  முன்னதாக 2016 ஆம் ஆண்டு T6X எனும் பெயரில் ப்ரோடோடைப் மாடலை டார்க் மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. 

தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் மோட்டார்சைக்கிள் கான்செப்ட் மாடைலை விட பெருமளவு அப்டேட் செய்யப்பட்டு இருப்பதாக டார்க் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. முற்றிலும்  புது வடிவமைப்பு கொண்டிருக்கும் டார்க் கிராடோஸ் மோட்டார்சைக்கிளில், புதிதாக உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

இந்த மோட்டார்சைக்கிளில் எல்.இ.டி. லைட்டிங் வழங்கப்பட்டு உள்ளது.  மேலும் இதன் கூர்மையான தோற்றம்  மோட்டார்சைக்கிளுக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகிறது. புதிய டார்க் கிராடோஸ் மாடலில் 7.5 கிலோ வாட் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இந்த மோட்டார் 10 பி.ஹெச்.பி. திறன், 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடல் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 4 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

டார்க் கிராடோஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலில் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 180 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது. சக்திவாய்ந்த மாடலான டார்க் கிராடோஸ் 9 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டிருக்கிறது. இது 12 பி.ஹெச்.பி. திறன், 10 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் மணிக்கு அதிகபட்சம் 105 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.

புதிய கிராடோஸ் ஆர் மாடலை வாங்குவோருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு சார்ஜிங் நெட்வொர்க் அக்சஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோஃபென்சிங், ஃபைண்ட் மை வெஹிகில், கிராஷ் அலெர்ட், டிராக் மோட் மற்றும் அனாலடிக்ஸ் போன்ற அம்சங்கள் உள்ளன. கிராடோஸ் ஆர் மாடல்- வைட், புளூ, ரெட் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 

click me!