உலக தங்க கவுன்சில் மதிப்பீட்டின்படி, அதிகளவில் தங்கத்தை வைத்திருக்கும் முதல் 20 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது
ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குத் தங்கம்தான் முக்கிய சேமிப்பாக இருக்கிறது. தங்கமும் எப்போதும் அவர்களை கைவிடுவதில்லை. தங்கத்தின் விலை ஏறினாலும் தங்கத்தை வாங்கும் ஆர்வம் பொதுமக்களிடம் குறைவதில்லை. அதேபோல், ஒவ்வொரு நாட்டுக்கும் தங்கத்தை கையிருப்பு வைத்திருப்பது மிகவும் அவசியம்.
ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு தங்க கையிருப்பு முக்கியமானதாக இருப்பதால், குறிப்பாக நிதி நிச்சயமற்ற நிலைகளின் போது தங்கம் நம்பகமான உலோகமாக உள்ளது. 1970களில் அதிகாரப்பூர்வமாக கைவிடப்பட்டாலும், பல நாடுகள் தங்கத்தின் கையிருப்பை பராமரித்து வருகின்றன. வளர்ந்து வரும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. ஒரு நாட்டின் கடன் தகுதி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நிலையை வடிவமைப்பதில் தங்கத்தின் கையிருப்பு தொடர்ந்து முக்கியப்பங்கு வகிக்கிறது.
அந்த வகையில், உலக தங்க கவுன்சிலின் மதிப்பீட்டின்படி அதிகளவில் தங்கத்தை வைத்திருக்கும் முதல் 20 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, 8,133.46 டன்களுடன் இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. 3,352.65 டன்களுடன் ஜெர்மனி 2ஆம் இடத்தையும், 2,451.84 டன்களுடன் இத்தாலி 3ஆம் இடத்தையும், 2,436.88 டன்களுடன் பிரான்ஸ் 4ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
ரஷ்யா, 2,332.74 டன்கள் தங்கத்துடன் பட்டியலில் 5ஆம் இடத்தையும், 2,191.53 டன்கள் தங்கத்துடன் சீனா 6ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. சுவிட்சர்லாந்து 1,040.00 டன்கள், ஜப்பான் 845.97 டன்களுடன் முறையே 7, 8ஆம் இடத்தை பிடித்துள்ளன.
விமான சரக்கு போக்குவரத்து துறையில் இந்தியா அதிவேக வளர்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்!
இந்த பட்டியலில் இந்தியா 9ஆம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் தங்கத்தின் கையிருப்பு 800.78 டன்களாக உள்ளன. இந்தியாவுக்கு அடுத்தப்படியாக 612.45 டன்கள் தங்கத்துடன் நெதர்லாந்து 10ஆவது இடத்தில் உள்ளது.
அதேபோல், தைவான் 423.63, உஸ்பெகிஸ்தான் 383.81, போர்ச்சுகல் 382.63, போலாந்து 333.71, சவுதி அரேபியா 323.07, இங்கிலாந்து 310.29, கசகஸ்தான் 309.38, லெபனான் 286.83, ஸ்பெயின் 281.58 டன்கள் தங்கத்துடன் முறையே 11 முதல் 20ஆம் இடத்தில் உள்ளன.