கொரோனா பாதிப்புகளால் பணத்தட்டுப்பாடு இருக்காது..! ஆர்.பி.ஐ அதிரடி தகவல்..!

By Manikandan S R SFirst Published Apr 17, 2020, 10:48 AM IST
Highlights

இந்தியாவில் அரிசி, கோதுமை போன்ற உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. மேலும் பணத் தட்டுப்பாடு நிகழ கூடாது என்பதற்காக வங்கிகளுக்கு போதுமான நிதியை ஆர்.பி.ஐ ஒதுக்கி இருக்கிறது. சிறு, குறு தொழிகளுக்கு பணம் வழங்கும் வகையில் வங்கிகளில் பணம் கையிருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 13,387 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 437 பேர் பலியாகி இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் உலக அளவில் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவிலும் பொருளாதாரம் சவாலான சூழலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே பொருளாதாரம் குறித்து விவரிப்பதற்காக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அவர் கூறியதாவது: கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போது வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டிருப்பது மிகப்பெரிய பொருளாதார சவால். எனினும் இக்கட்டான சூழலிலும் வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ஆர்பிஐ உறுதி செய்திருக்கிறது. இந்தியா முழுவதும் வங்கிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸிற்கு எதிரான போரை சந்திக்க ஆர்பிஐ தயாராகவே இருக்கிறது. உலகளவில் கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் மிகப்பெரிய சவாலை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதனால் ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் தற்போது கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதே முக்கிய சவாலாக இருக்கிறது. 

2021-22ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக இருக்கும். சர்வதேச நிதியம் இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது. ஜீ-20 நாடுகளில் வளர்ச்சி காணும் நாடாக இந்தியா விளங்குகிறது. தற்போதைய நிலையில் கச்சா எண்ணெய் விலையிலும் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகளால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு நாட்டின் மின் தேவை 20 முதல் 25% வரை குறைந்துள்ள நிலையில் ஊரடங்கு காலத்தில் இணைய பயன்பாடு அதிகரித்திருக்கிறது. ஆட்டோ மொபல் விற்பனையில் கடந்த மார்ச் மாதம் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அரிசி, கோதுமை போன்ற உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. மேலும் பணத் தட்டுப்பாடு நிகழ கூடாது என்பதற்காக வங்கிகளுக்கு போதுமான நிதியை ஆர்.பி.ஐ ஒதுக்கி இருக்கிறது. சிறு, குறு தொழிகளுக்கு பணம் வழங்கும் வகையில் வங்கிகளில் பணம் கையிருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

click me!