
தகவல்தொழில்நுட்பத்தில் ஜாம்பவானான டாடா கன்சல்டன்சி(டிசிஎஸ்) நிறுவனம், நியூ ஜெர்ஸியில் தனது கிளையை அமைக்க உள்ளதால், புதிதாக வேலைக்கு இளைஞர்களை எடுக்க இருக்கிறது.
டிஜிட்டல்ரீதியாக மாறிவரும் வர்த்தகத்தில் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்ற அதிகமான இளைஞர்கள் தேவைப்படுகிறார்கள். ஆதலால், 2023ம் ஆண்டுக்குள் ஆயிரம் இளைஞர்களை வேலைக்கு எடுக்க டிசிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது
ஸ்டெம்(STEM) எனப்படும் அறிவியல்,தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை ஒருங்கிணைந்த திட்டத்தை நியூ ஜெர்ஸியில் அறிமுகப்படுத்த டிசிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 1,000 பேரை வேலைக்கு எடுக்கிறது.
நியூ ஜெர்ஸி மாகாணத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். 3,700 ஊழியர்கள் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். தகவல் தொழில்நுட்பம், கல்சல்டிங் சேவை, செயற்கை நுண்ணறிவு, க்ளவுட் கம்ப்யூட்டிங், மென்பொருள் வடிவமைப்பு என பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். இன்னும் அதிகமான வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும், அதிகரித்த வாடிக்கையாளர்களைச் சமாளிக்கவும் புதிதாக இளைஞர்களை வேலைக்கு டிசிஎஸ் எடுக்க இருக்கிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடஅமெரிக்க டிசிஎஸ் தலைவர் சூர்ய காந்த் கூறுகையில் “ நியூ ஜெர்ஸியில் டிசிஎஸ் நிறுவனம் தனது கிளையை விரிவுபடுத்துவது உண்மையில் பெருமைக்குரியது. நியூ ஜெர்ஸி மாகாணம் தொழில்நுட்ப முனையத்துக்கு முக்கியமான இடம். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நாங்களும் துணையாக இருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.