
sterlite copper: vedanta :தொழிலதிபர் அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா குழுமம், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக விருப்ப மனுக்களைக் கோரி விளம்பரம் செய்துள்ளது. ஆனால், இது பற்றி தெரிவிக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை வாங்க விரும்பும் நிறுவனங்கள் தங்களின் தகுதி, விருப்பம்,நிலைப்பாடு குறித்த எக்ஸ்பிரஷன் ஆஃப் இன்ட்ரெஸ்ட் ஆவணத்தை ஜூலை 4ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் வேதாந்தா குழுமம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர், 102 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.
ஆனால், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உற்பத்தி நிறுத்தப்பட்டதால், தேசத்துக்கு 120 கோடி டாலர் இழப்பு ஏற்படும் என்று வேதாந்தா குழுமம் தெரிவித்தது.
காப்பர் பொருட்களை அதாவது காப்பர், சல்பியூரிக் ஆசிட், ப்ளூரோசிலிக் ஆசிட் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 400 சிறு, குறுந்தொழில்கள் உள்ளன. இதில் 12 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டால், அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஆண்டுக்கு ரூ.700 கோடி இழப்பு ஏற்படும் என்று வேதாந்தா குழுமம் வாதிட்டது.
ஸ்டெர்லைட் ஆலை மூலம் தயாரிக்கப்படும் காப்பர், தேசத்தின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறவேற்றுகிறது. அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2500 கோடி வருவாய், தூத்துக்குடி துறைமுகத்துக்கு 12 சதவீதம் வருவாய், தமிழகத்தில் 95 சதவீத சல்பர் சந்தையும் பாதிக்கப்படும் என்று வேதாந்தா குழுமம் தெரிவித்தது.
ஸ்டெர்லைட் ஆலை ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் டன் காப்பர் உற்பத்தியும், 12லட்சம் மில்லியன் டன் சல்பியூரிக் ஆசிட்டும் உற்பத்தி செய்கிறது. இதுதவிர பாஸ்பரிக் ஆசிட் 2.20 லட்சம் டன் தயாரிக்கிறது. இது தவிர 160மெகாவாட் மின்உற்பத்தியும் நடக்கிறது. இவை அனைத்தும் பாதி்க்கப்படும் என்று வேதாந்தா குழுமம் தெரிவித்தது.
ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில் 2013ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டுவரை ஸ்டெர்லைட் ஆலையில் 84முறை வாயுக்கசிவு நடந்துள்லது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை வேதாந்தா குழுமம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் பங்குச்சந்தையில் இன்று வேதாந்தா குழுமத்தின் பங்கு மதிப்பு 10.5 சதவீதம் சரிந்து ரூ.236 ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா குழுமம் பிரசுரித்துள்ள விளம்பரம் அந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கே வியப்பை அளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை விற்பது எனும் திட்டம் வேதாந்தா குழுமத்தின் திட்டத்தில்இல்லை எனத் தெரிவித்துள்ளனர். ஆனால்,இந்த விளம்பரத்தைப் பற்றி ஏதும் தெரியாது, டெல்லி அலுவலகத்திலிருந்து வந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் தினசரி ரூ.5 கோடி இழப்பு ஏற்படுகிறது. மீண்டும் ஆலையை நடத்தவிரும்பானால், ரூ.800 கோடி முதல் ரூ.1000 கோடி வேதாந்தா குழுமத்துக்கு தேவைப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.