stagflation: தேக்கநிலையை நோக்கி நகர்கிறதா இந்தியப் பொருளதாரம்? பூசிமெழுகும் நிதி அமைச்சகத்தின் அறிக்கை

By Pothy RajFirst Published Jun 21, 2022, 11:43 AM IST
Highlights

stagflation : மத்திய நிதிஅமைச்சகம் நேற்று வெளியிட்ட மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில் “ மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியப் பொருளாதாரம் தேக்கநிலையை நோக்கி நகர்வதற்கு குறைவான வாய்ப்புகள்தான் உள்ளன. பட்ஜெட் பற்றாக்குறைதான் இருக்கிறது. சர்வதேச காரணிகளால்தான் பொருளாதார வளர்ச்சிக் குறைவு ஏற்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது.

மத்திய நிதிஅமைச்சகம் நேற்று வெளியிட்ட மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில் “ மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியப் பொருளாதாரம் தேக்கநிலையை நோக்கி நகர்வதற்கு குறைவான வாய்ப்புகள்தான் உள்ளன. பட்ஜெட் பற்றாக்குறைதான் இருக்கிறது. சர்வதேச காரணிகளால்தான் பொருளாதார வளர்ச்சிக் குறைவு ஏற்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது.

தேக்கமுற்ற பணவீக்கம்

பொதுவாக தேக்கமுற்றபணவீக்கம்(Stagflation) என்பது ஒருநாட்டில் பணவீக்கம் உச்சபட்சமாக இருக்கும், வேலையின்மை அளவும் அதிகமாக இருந்து, பொருளாதார வளர்ச்சி அதாவது ஜிடிபி குறைந்து கொண்டே வந்தால் அங்கு தேக்கமுற்றபணவீக்கம் இருப்பதாகும். அமெரிக்கா அதை நோக்கி நகர்வதாக பல பொருளாதார வல்லுநர்கள்  எச்சரித்துள்ளனர். 

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை பணவீக்கம் உச்சத்தில் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. அதைக் கட்டுப்படுத்த இப்போதுதான் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் இந்த நிதியாண்டு முழுவதும் பணவீக்கம் அதிகமாகத்தான் இருக்கும் என ரிசர்வ் வங்கி வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டது. 

வேலையின்மை அளவும் பெரிதாகக் குறையவில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சர்வதேச நிதியம், பிட்ச், மூடிஸ் போன்ற நிறுவனங்கள் குறைத்துக் கணித்துள்ளன. இந்த காரணிகள் அனைத்தும் தேக்கநிலை தொடக்கத்திற்கான அறிகுறிகளாகவே எடுத்துக்கொள்ளலாம்.

மழுப்பல்

ஆனால், மத்திய நிதிஅமைச்சகம் பொருளாதார வளர்ச்சிக் குறைவு இருக்கிறது, பணவீக்கம் குறையவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறது. வேலையின்மையை் பற்றி பெரிதாகக் கூறாமல் மழுப்பலாகவே அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மே மாதத்துக்கான பொருளாதார அறிக்கையை மத்திய நிதிஅமைச்சகம் நேற்று வெளியி்ட்டது அதில் கூறப்பட்டிருப்பதாவது:

குறுகியகால சவால்கள்
இந்தியா குறுகியகால சவால்களான நிதிப்பற்றாக்குறை, பொருளாதார வளர்ச்சியை நிலைப்படுத்துதல், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், நடப்புக்கணக்குப்பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துல், ரூபாய் மதிப்பை சரியவிடாமல் தடுத்தல் போன்ற சவால்கள்தான் உள்ளன.

பல நாடுகள் குறிப்பாக வளர்ந்த நாடுகள், இதேபோன்ற சவால்களைச் சந்தித்தாலும், அந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா சிறந்த இடத்தில்தான் இருக்கிறது. மேலும் அதன் நிதித் துறையின் ஸ்திரத்தன்மை மற்றும் தடுப்பூசி செலுத்துவதில் வெற்றி, ஆகியவைதான் பொருளாதார சூழல் விரைவாக இயல்புக்கு வருவதற்கு காரணமாக அமைந்தன. இது வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா சிறப்பாகவே இருக்கிறது

நடுத்தரகாலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பிரகாசமாகவே இருக்கிறது, தனியார் துறைகள் புதிய முதலீடு செய்யவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஆர்வத்துடன் இருப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். 

கொரோனா காலத்தில் இந்தியப் பொருளாதரம் மைனஸ் 6.6 சதவீதமாக வீழ்ந்தது, கடந்த 2021-22 நிதியாண்டில் 8.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

பணவீக்கம் அதிகரிப்பு

கடந்த ஏப்ரல் மாதம் பணவீக்கம் 7.79 சதவீதம் இருந்தநிலையில் ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை, பெட்ரோல், டீசலுக்கு உற்பத்தி வரியைக் குறைத்ததால், மே மாதத்தில் பணவீக்கம் 7.04 சதவீதமாகக் குறைந்தது. இருப்பினும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவைவிட இது அதிகம்தான். 

2022 மே 31ம் தேதி வெளியான இந்தியப் பொருளாதாரம் குறித்தஅறி்க்கையில் கொரோனா பாதிப்பிலிருந்து இந்தியப் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளது. வேளாண் துறையில் வளர்ச்சியை நிலைப்படுத்துதல், முதலீட்டை அதிகப்படுத்துதல், ஏற்றுமதியை அதிகப்படுத்துதல் மூலம் மீட்சியை மேலும் விரைவுப்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.

கமாடிட்டி விலை

சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்சவாலாக கமாடிட்டி விலை உயர்வு, சப்ளையில் ஏற்பட்டுள்ள தடைகள், வட்டிவீதம் உயர்வு போன்றவை இருக்கின்றன. சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறையும் என பல பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளன.

இந்தியப் பொருளாதாரமும் குறைந்த வளர்ச்சியைத்தான் எதிர்கநோக்கி இருந்தாலும், மற்ற வளரும்பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறந்த இடத்தில் இருக்கிறது. கமாடிட்டி விலை உயர்வு, மானியச் சுமை அதிகரி்பபு போன்றவை, நிதிப்பற்றாக்குறை, நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை உருவாக்கும் என்பதால் எச்சரிக்கை தேவை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

click me!