ஹிண்டன்பர்க் அறிக்கை அவப்பெயரை உண்டாக்கும் தவறான தகவல் என தொழிலதிபர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்
அதானி குழும நிறுவனங்களின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய அக்குழுமத்தின் தலைவரும், தொழிலதிபருமான கவுதம் அதானி, ஹிண்டன்பர்க் அறிக்கையானது அவப்பெயரை உண்டாக்கும், தவறான தகவல்களை உள்ளடக்கிய கலவை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவைச் சேர்ந்த குறுகியகால பங்கு விற்பனையாளரான ஹிண்டன்பர்க், அவர்களது லாபத்துக்காக ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. இது திட்டமிடப்பட்ட ஒன்று.” என கவுதம் அதானி தெரிவித்தார்.
ஹிண்டன்பர்க் அறிக்கையானது அவப்பெயரை உண்டாக்கும், தவறான தகவல்களை உள்ளடக்கிய கலவை. அவற்றில் பெரும்பாலானவை 2004 முதல் 2015 வரையிலானது எனவும் கவுதம் அதானி சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “குற்றச்சாட்டுகள் அனைத்தும் அந்த நேரத்தில் உரிய அதிகாரிகளால் தீர்த்து வைக்கப்பட்டன. அந்த அறிக்கையானது நமது நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதை நோக்கமாகக் கொண்டது. வேண்டுமென்றே நமக்கு தீங்கிழைப்பதற்கான முயற்சி அது. நமது பங்குகளின் விலைகளை குறுகிய காலத்தில் விற்று லாபம் ஈட்டுவதற்காக வெளியிடப்பட்டதுதான் ஹிண்டன்பெர்க் அறிக்கை.” என கவுதம் அதானி தெரிவித்தார்.
இருப்பினும், முழு சந்தா பெற்ற FPOவாக இருந்த போதிலும், முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக பணத்தை திரும்பப் பெறவும், முதலீட்டாளர்களுக்குத் திருப்பித் தரவும் அதானி குழுமம் முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்து மறுப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டிய கவுதம் அதானி, “ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்து நாங்கள் உடனடியாக ஒரு விரிவான மறுப்பை வெளியிட்டாலும், குறுகிய விற்பனையாளரான அவர்களின் குற்றச்சாட்டை சுயநலவாதிகள் பயன்படுத்திக் கொள்ள முயன்றனர். அவர்கள், நம்மை பற்றி பல்வேறு செய்திகள் மற்றும் சமூக ஊடக தளங்களில் தவறான தகவல்களை பரப்பினர்.” என்றும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கு பெயர் வைத்த வைகோ!
அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்குச் சந்தையில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து, ரூ.17.80 லட்சம் கோடிக்கு மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
மேலும், “அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு தோராயமாக 120 பில்லியன் டாலர் (ரூ.9.84 லட்சம் கோடி). இதில், 100 பில்லியன் டாலர் (ரூ.8.2 லட்சம் கோடி) கடந்த மூன்று ஆண்டில் ஈட்டப்பட்டுள்ளது. அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக அபரிமிதமாக உயர்ந்துள்ளது. பங்குச்சந்தையில் மோசடி செய்து, போலி நிறுவனங்கள் மூலமாக அதானி நிறுவனம் பணத்தை முறைகேடாக ஈட்டியுள்ளது. போலி நிறுவனங்களைத் தொடங்கிவரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்.” என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
இதையடுத்து, அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு அதிரடியாக சரிந்தது. அதன் தொடர்ச்சியாக, “ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது, உள்நோக்கம் கொண்டது. அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்திய ஒருமைப்பாடு, இந்திய நிறுவனங்களின் தரம், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் எதிர்கால இலக்கு ஆகியவற்றுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல் இந்த அறிக்கை.” என அதானி குழுமம் விளக்கம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.